உலோகத் தகடு உருவாக்கம் 2024 மாநாட்டை ஐ.ஐ.டி ரோப்பார் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. இதில் தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஐஐடி-கள், ஆட்டோஃபார்ம், எலக்ட்ரோநியூமேடிக்ஸ் & ஹைட்ராலிக்ஸ், ஆல்டேர், டாடா ஸ்டீல், டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட், ஃபோர்டு இந்தியா, ஃபெல்ஸ் சிஸ்டம் ஜிஎம்பிஹெச், ஜேபிஎம் ஆட்டோ லிமிடெட் உள்ளிட்ட முக்கிய தொழில் நிறுவனங்களின் நிபுணர்கள் உரையாற்றினர். இது உலோகத் தகடு உருவாக்க ஆய்வு சங்கத்தின் முக்கியமான மாநாடாகும். இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மேம்பாட்டாளர்களுக்கு உலோகத்தை உருவாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்த யோசனைகளை முன்வைக்கவும் பரிமாறிக் கொள்ளவும் ஒரு தளத்தை இது ஏற்படுத்தியது.
இந்த மாநாடு டிசம்பர் 5-ம் தேதி தொடங்கியது. ஐஐடி ரோப்பாரின் எந்திரப் பொறியியல் துறையைச் சேர்ந்தவரும், மாநாட்டின் அமைப்புச் செயலாளருமான பேராசிரியர் அனுபம் அகர்வால் வரவேற்புரையாற்றினார்.ஐஐடி ரோப்பார் இயக்குநர் பேராசிரியர் ராஜீவ் அஹுஜா, மாநாட்டின் வெற்றிக்கு நல்வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து எந்திரப் பொறியியல் துறைத் தலைவரும், மாநாட்டின் தலைவருமான டாக்டர் பிரபாத் கே. அக்னிஹோத்ரி உரையாற்றினார். தலைமை விருந்தினராக ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் லிமிடெட் துணைத் தலைவர் டாக்டர் சந்தோஷ் குமார் ராஸ்கின்ஹா நினைவு சொற்பொழிவை வழங்கினார். உலோகத் தகடு உருவாக்கத் துறையில் அண்மைக்கால முன்னேற்றங்கள் மற்றும் சவால்கள் பற்றிய கருத்துகளை அவர் பகிர்ந்து கொண்டார். மாநாட்டின் செயலாளரும் ஐ.ஐ.டி பம்பாய் பேராசிரியருமான கே.நரசிம்மன், உலோகத் தகடு உருவாக்கத்தில் கல்வியாளர்களுக்குள்ள முக்கிய சவால்களை எடுத்துரைத்தார். கல்வி மற்றும் தொழில்துறையை இணைப்பதில் இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டினார். ஐஐடி ரோப்பாரின் எந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் நவீன் குமார் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது.