தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டமானது தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் காசநோய் பாதிப்பு விகிதம் 2015-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 237 ஆகவும் 2023-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 195 ஆகவும் இருந்தது. அதாவது பாதிப்பு 17.7% குறைந்துள்ளது. காசநோய் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகள் 2015-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு 28 ஆகவும் 2023-ல் ஒரு லட்சம் பேருக்கு 22 ஆகவும் இருந்தது. இறப்பு 21.4% குறைந்துள்ளது.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் விவரங்கள்
மாநிலங்கள், மாவட்ட அளவில் குறிப்பிடத்தக்க உத்திசார் நடவடிக்கைகள் மூலம் காசநோய் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதனை அகற்றுவதற்கான இலக்குகளை பூர்த்தி செய்தல்.
காசநோயாளிகளுக்கு இலவச மருந்துகள் மற்றும் நோய் கண்டறிதல் ஆகிய சேவைகளை வழங்குதல்.
அதிக அளவில் பாதிக்கப்படக்கூடிய மற்றும் இணை நோயுடன் கூடிய மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் காசநோய் பாதிப்புக் குறித்து கண்டறிதல்.
ஆயுஷ்மான் சுகாதார மையத்தில் காசநோய் பரிசோதனை, அதற்கான சிகிச்சைகளை ஒருங்கிணைத்தல்.
காசநோய் பாதிப்புகள் குறித்து அறிவிப்பதற்கும் நிர்வகிப்பதற்கும் அவற்றை நிர்ணயிப்பதற்கும் ஊக்கத்தொகையுடன் கூடிய திட்டத்தில் தனியார் துறையின் பங்களிப்பையும் ஊக்குவித்தல்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் இதனைத் தெரிவித்தார்.