மாநிலங்களவையில், அதன் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்றுள்ள இளம் வீரர் குகேஷூக்கு இன்று வாழ்த்து தெரிவித்தார். அவரது உரை பின்வருமாறு:
“மாண்புமிகு உறுப்பினர்களே, இந்திய விளையாட்டு வரலாற்றில் அற்புதமான உலகளாவிய சாதனைப் படைக்கப்பட்டுள்ளதை பெரு மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். டிசம்பர் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு அற்புதமான சதுரங்கப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து இளைய உலக சதுரங்க சாம்பியனாக நமது 18 வயது சதுரங்க விற்பன்னர் டி. குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
இந்த நட்சத்திர வெற்றி சதுரங்கப் பலகையையும் தாண்டி எதிரொலிக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி இதற்கு உறுதுணையாக உள்ளது. குகேஷின் தனித்துவமான வெற்றி நமது விளையாட்டு பாரம்பரியத்தை அலங்கரிப்பதுடன் மட்டுமல்லாமல், உலக அரங்கில் ஆதிக்கம் செலுத்த இளம் வீரர்கள் உருவாக உதவும். 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நமது தீர்மானத்தை இது வலுப்படுத்துகிறது.
சிங்கப்பூரில் நமது அற்புதமான மூவர்ணக் கொடியை பறக்க செய்த டி. குகேஷுக்கு இந்த மாபெரும் அவையின் சார்பிலும், நமது புகழ்பெற்ற தேசத்தின் சார்பிலும் நமது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது 1.4 பில்லியன் இந்தியர்களின் வெல்ல முடியாத உணர்வு மற்றும் உயரும் விருப்பங்களை விண்ணை நோக்கி எடுத்துச் செல்கிறது”.