தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 2024-ஐ முன்னிட்டு, புதுதில்லி விக்யான் பவனில் நடைபெற்ற பிரமாண்டமான விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வு எரிசக்தி சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டியதுடன் எரிசக்தி சேமிப்புச் செயல்திறனுக்கான சிறந்த பங்களிப்பைக் கொண்டாடியது.
விழாவின் போது, எரிசக்தி சேமிப்பு 2024 குறித்த தேசிய ஓவியப் போட்டியின் வெற்றியாளர்களை குடியரசுத் துணைத் தலைவர் கௌரவித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துதல், ஆற்றலை உகந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவை நமது கடமையாகும் என்றார். பூமியில் உள்ள நமது வளங்கள் எல்லையற்றவை அல்ல என்றும், அவை வரம்புக்குட்பட்டவை என்றும் அவர் கூறினார். நாம் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால், அது நமது எதிர்கால சந்ததியினருக்கு கிடைக்க வேண்டியதை நாம் பறிப்பதாக ஆகிவிடும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக், மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு பங்கஜ் அகர்வால், பிஇஇ தலைமை இயக்குநர் திரு ஸ்ரீகாந்த் நகுலப்பள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருது பெற்றவர்களை திரு ஸ்ரீபத் நாயக் கௌரவித்தார்.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகள் 2024 க்கான விண்ணப்பங்கள் திறந்த விளம்பரத்தின் மூலம் வரவேற்கப்பட்டன.
இதில் பல்வேறு தொழில்கள், போக்குவரத்து, கட்டிடங்கள், நிறுவனங்கள், உபகரணங்கள், கண்டுபிடிப்பு உள்ளிட்ட துறைகளில் மொத்தம் 752 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த ஆண்டு விருதுகளில் 23 முதல் பரிசுகள், 19 இரண்டாம் பரிசுகள், 25 தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் 4 புத்தாக்க அங்கீகார சான்றிதழ்கள் அடங்கும்.
2005-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஓவியப் போட்டி, இளம் மனங்களின் படைப்பாற்றல் மூலம் சமூக மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பள்ளி, மாநில, தேசிய அளவில் மூன்று நிலைகளாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டி 5 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை இரண்டு பிரிவுகளாகக் கொண்டு நடத்தப்பட்டது.