2047-ம் ஆண்டிற்கான வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதற்கு, உலகளாவிய உத்திகள் அளவுகோல்களை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம் என மத்திய அறிவியல் – தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
தில்லி பாரத் மண்டபத்தில் முன்னணி ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “இந்திய பொருளாதார மாநாட்டில்” அவர் பங்கேற்றுப் பேசினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி பதவியேற்பதற்கு முன்பு இந்தியாவின் விண்வெளி, கடல், இமயமலை வளங்கள், போதுமான அளவு ஆராயப்படவில்லை என்றார். தற்போது இவற்றில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் இந்தியாவின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு இவை கணிசமாக பங்களிக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா தனது விண்வெளித் துறையை உலகத் தரத்திற்கு உயர்த்தும் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். விண்வெளிப் பொருளாதாரத்தில் 2014-ம் ஆண்டு முதல் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் கூறினார்.
தற்போது உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் விண்வெளித் துறை எட்டு முதல் ஒன்பது சதவீத பங்களிப்பை அளிக்கிறது என்று கூறிய டாக்டர் ஜிதேந்திர சிங், அடுத்த பத்து ஆண்டுகளில் இது மூன்று மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறினார்.