Monday, December 08 2025 | 02:58:52 PM
Breaking News

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி, மத்தியப் பிரதேசத்தில் கென்-பேட்வா நதிகள் இணைப்புக்கான தேசிய திட்டத்திற்கு பிரதமர் டிசம்பர் 25 அன்று அடிக்கல் நாட்டுகிறார்

Connect us on:

முன்னாள் பிரதமர் திரு.அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 25 அன்று மத்தியப் பிரதேசத்திற்குப் பயணம் மேற்கொள்கிறார். மதியம் 12:30 மணியளவில், கஜுராஹோவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கியும் வைக்கிறார்.

தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், நாட்டின் முதலாவது நதிகள் இணைப்புத் திட்டமான கென்-பெட்வா நதிகளை இணைக்கும் தேசியத் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டம் மத்தியப் பிரதேசத்திலும்  உத்தரப்பிரதேசத்திலும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு நீர்ப்பாசன வசதியை  வழங்குவதுடன், லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கும் பயனளிக்கும். இந்தத் திட்டம் பிராந்திய மக்களுக்கு குடிநீர் வசதியையும் வழங்கும். இதனுடன்,  100 மெகாவாட்டுக்கும் அதிகமான பசுமை ஆற்றலை வழங்கும் நீர்மின் திட்டங்களும் தொடங்கி வைக்கப்படும். இந்தத் திட்டங்கள்  வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.

முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நினைவுத்  தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிடுகிறார். 1153 அடல் கிராம நல் ஆளுகைக் கட்டிடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். உள்ளூர் அளவில் நல்ல நிர்வாகத்திற்கு  வழிவகுக்கும் கிராமப் பஞ்சாயத்துகளின் பணிகள் மற்றும் பொறுப்புகளில் இந்தக் கட்டிடங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

எரிசக்தி தன்னிறைவு மற்றும் பசுமை எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான அவரது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள ஓம்காரேஸ்வரில் நிறுவப்பட்டுள்ள ஓம்காரேஸ்வர் மிதக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டம் கார்பன் உமிழ்வைக் குறைக்கும்; 2070-க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு என்ற அரசின் இலக்கை அடைய இது உதவும். இது நீர் ஆவியாதலைக் குறைப்பதன் மூலம் நீர் பாதுகாப்பிற்கும் உதவும்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.