சம்விதான் சதன் மைய மண்டபத்தில் பண்டிட் மதன் மோகன் மாளவியா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா இன்று மலர் அஞ்சலி செலுத்தினார்.
மத்திய சுகாதாரம் – குடும்ப நலத் துறை அமைச்சர் திரு. ஜகத் பிரகாஷ் நட்டா, மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய வர்த்தகம் அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பண்டிட் மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மக்களவைச் செயலகத்தால் இந்தி, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட பண்டிட் மதன் மோகன் மாளவியா, திரு அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் விவரங்கள் அடங்கிய சிறு புத்தகங்கள் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டன.
பண்டிட் மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் உருவப்படங்கள் சம்விதான் சதனின் (பழைய நாடாளுமன்ற இல்லம்) மைய மண்டபத்தில் முறையே 1957 டிசம்பர் 19, 2019 பிப்ரவரி 12 ஆகிய தேதிகளில் திறந்து வைக்கப்பட்டன.
நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை 2015-ம் ஆண்டில் பண்டிட் மதன் மோகன் மாளவியா, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.
முன்னதாக, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, புதுதில்லியில் உள்ள ‘சதைவ் அடல்‘-லில் திரு அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திரு பிர்லா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முன்னாள் பிரதமர் பாரத ரத்னா மறைந்த திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலிகள். புத்திசாலித்தனமான அரசியல்வாதி, ஆற்றல்மிக்க கவிஞர், எழுத்தாளர், வழிகாட்டி, உத்வேகம் அளிக்கும் ஆளுமை என பல வகைகளில் அடல் பிஹாரி வாஜ்பாய் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
மக்களவைக்கு 10 முறையும், மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம், மதிப்பிற்குரிய அடல் பிஹாரி வாஜ்பாய் நமது நாடாளுமன்ற பாரம்பரியத்தை வளப்படுத்தியதுடன், தமது வாழ்நாள் முழுவதும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அனைவராலும் மதிக்கப்பட்டவர். நாடாளுமன்ற மரபுகள் குறித்த அவரது அணுகுமுறை, சபையில் எளிமையுடனும் கண்ணியத்துடனும் அவர் நடந்து கொண்ட விதம் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் முன்மாதிரியாக உள்ளது. மறைந்த அடல் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்த நாளில் நாடு முழுவதும் நல்லாட்சி தினம் கொண்டாடப்படுகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த நாளில் நல்வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் நினைவாக திரு பிர்லா தமது பதிவில், “சிறந்த கல்வியாளரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பண்டிட் மதன் மோகன் மாளவியா பிறந்த நாளில் அவருக்கு தாழ்மையான அஞ்சலிகள்.
பாரத ரத்னா மாளவியா அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டது. கல்வியைப் பற்றிய அவரது அணுகுமுறை இந்திய கலாச்சாரத்தையும் நவீன அறிவியலையும் அழகாக இணைப்பதாக இருந்தது.
நவீன அறிவு, அறிவியலால் வளப்படுத்தப்பட்ட, இந்தியத்தன்மையின் உணர்வால் நிரப்பப்பட்ட ஒரு தலைமுறையை உருவாக்கும் நோக்கத்துடன், அவர் காசி இந்து பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார். அவரது ஆளுமையும் பணியும் எப்போதும் நமக்கு ஊக்கமளிக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.