புதுதில்லியில் நடைபெற்ற “பருவநிலை-தாங்குதிறன் வேளாண் நடவடிக்கைகளுக்கான பாரம்பரிய பயிர் ரகங்கள் மூலம் மானாவாரி பகுதிகளில் வேளாண்-பல்லுயிர் பெருக்கத்திற்கு புத்துயிரூட்டுதல்” என்ற பன்முகப் பயனாளர் மாநாட்டில் உரையாற்றிய மத்திய வேளாண் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதி, பாரம்பரிய விவசாயமும் தோட்டக்கலை பயிர் வகைகளும் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். வேளாண், தோட்டக்கலைப் பயிர்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தேசிய ஊட்டச்சத்து நிதியம், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், விதை மேம்பாட்டுத் திட்டங்கள், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் பாரம்பரிய பயிர் ரகங்களை ஊக்குவிக்க வேளாண் அமைச்சகம் ஆர்வத்துடன் உள்ளது என்று அவர் கூறினார். பாரம்பரிய பயிர் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த அவர், இத்தகைய பயிர் ரகங்கள் சிறந்த சுவை, மணம், நிறம், சமையல் தரம், அதிக ஊட்டச்சத்து போன்ற தனித்துவமிக்க பண்புகளைக் கொண்டுள்ளன என்று கூறினார். இந்தப் பயிர் வகைகளை பயிரிட்டு கூடுதல் விலையுடன் அவற்றை சந்தைப்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். ஏனெனில் இதுபோன்ற பண்புகளை விரும்பி வாங்குபவர்கள் உள்ளனர்; இதற்கு சில முன்னுதாரணங்களையும் அவர் மேற்கோள் காட்டினார்.
பல்வேறு மாநிலங்கள், திட்டங்களின் முதலீட்டு வகைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மானாவாரி பகுதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தேசிய மானாவாரி பகுதிகள் ஆணையம் நிறுவப்பட்டது என்று டாக்டர் ஃபைஸ் அகமது கித்வாய் கூறினார். இத்தகைய பகுதிகளில் அதிக முதலீடு செய்ய மாநிலங்களை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.