நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையானது நிதி மேலாண்மை, கொள்கை சீர்திருத்த நடவடிக்கைகள் வாயிலாக நிதி நிர்வாகம், பொது நலன் தொடர்பான நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது. பொது நிதி மேலாண்மை அமைப்பு மூலம் நேரடி பணப்பரிமாற்றத்தை செயல்படுத்தி சாதனை படைத்துள்ளது. இந்த நடவடிக்கை 2024-25-ம் நிதியாண்டில் 1,206-க்கும் கூடுதலான நலத் திட்டங்களின் பரிவர்த்தனைகளில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்துள்ளது. 2024-25 நிதியாண்டில் 181.64 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில் ரூ.2.23 லட்சம் கோடி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப, கூடுதல் கடனுதவி, வாங்கும் திறன், செயல் திறனுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டங்கள், பேரிடர் மீட்பு, சுகாதாரம், மண்டல மேம்பாட்டுக்கான மானியங்கள் போன்ற நடவடிக்கைகளை எளிதாக்குவதன் மூலம் மாநில அரசின் நிதி சார்ந்த கட்டமைப்புகளை செலவினத்துறை வலுப்படுத்தியுள்ளது. 2024-25-ம் நிதியாண்டில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு ரூ.9.40 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. மின்சாரத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்காக மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலாக 0.5% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிதி சார்ந்த பொது விதிகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடுகளுக்கான உச்சவரம்பு, 2024-ம் ஆண்டில் திருத்தப்பட்ட கொள்முதல் வெளியீடு ஆகியவற்றுடன் கொள்முதல் நடவடிக்கைகளுக்கான சீர்திருத்தங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் வகையில், வெளிப்படைத்தன்மை, கொள்முதல் நடைமுறைகளில் தெளிவு, நவீன நிர்வாகத்திறன் போன்ற அம்சங்களில் தேவைகளுக்கு ஏற்ப சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
2024-ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் செலவினத் துறையின் சில முக்கிய சாதனைகள் பின்வருமாறு:
பொது நிதி மேலாண்மை அமைப்பின் வாயிலாக நேரடி பணப் பரிமாற்றம்
பொது நிதி மேலாண்மை அமைப்பு மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. இது மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் நேரடிப் பணப் பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது.
நேரடிப் பண பரிமாற்றத்தின் சாதனைகள் [DBT] (31 நவம்பர் 2024 வரை)
2024-25-ம் ஆண்டில் நேரடி பணப்பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 1,206 திட்டங்கள் உள்ளன
2024-25-ம் நிதியாண்டில் 181.64 கோடி பரிவர்த்தனைகள்.
2024-25-ம் நிதியாண்டில் பயனாளிகளுக்கு ரூ.2.23 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை
1,212.27 கோடி பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.
2014-ம் ஆண்டு முதல் பயனாளிகளுக்கு ரூ.20.23 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
15-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, 2024-25-ம் நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) வழக்கமான நிகரக் கடன் உச்சவரம்பு 3% வரை பராமரிக்க மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2024-25-ம் ஆண்டில் மாநிலங்களின் நிகர கடன் தொகை ரூ.9,39,717 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3% ஆகும்.
2022-ம் ஆண்டில் கொள்முதல் கையேடு கடைசியாக வெளியிடப்பட்டது. அதன் கொள்கைகள் பல்வேறு அம்சங்களுக்கான தெளிவுகள் கலந்துரையாடல்கள் கொள்முதல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கான முறை, பொருட்களுக்கான மாதிரி ஒப்பந்தப் புள்ளி ஆவணங்கள் போன்றவற்றில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பொருட்களுக்கான கொள்முதல் கையேட்டை முழுமையாக திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 2024 ஜூலை மாதத்தில் சரக்குகளை கொள்முதல் செய்வதற்கான கையேட்டை மத்திய செலவினத் துறை திருத்தியமைத்துள்ளது.