பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘மனதின் குரல்’ 117-வது நிகழ்ச்சியில் , இந்தியாவின் படைப்பாற்றல், பொழுதுபோக்குத் துறையில் ஒரு முக்கிய மைல்கல் குறித்து உற்சாகமான செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர், 2025 பிப்ரவரி 5 முதல் 9 வரை, முதல் முறையாக உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டை (WAVES) இந்தியா நடத்தும் என்று கூறினார்.
வேவஸ் உச்சி மாநாடு: இந்தியாவின் படைப்பாற்றல் திறமைக்கான உலகளாவிய மேடை
வேவ்ஸ் உச்சிமாநாட்டை உலகின் பொருளாதார ஜாம்பவான்கள் கூடும் டாவோஸ் போன்ற உலக நிகழ்வுகளுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமர், “இந்தியாவின் படைப்பாற்றல் திறனை உலகிற்கு வெளிப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. ஊடகம், பொழுதுபோக்குத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்களும், உலகெங்கிலும் உள்ள படைப்பாளிகளும் இந்தியாவில் கூடுவார்கள். உலகளாவிய உள்ளடக்க உருவாக்கத்தின் மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு இந்த உச்சிமாநாடு ஒரு முக்கியமான படியாகும்.
இந்தியாவின் படைப்பாற்றல் சமூகத்தின் துடிப்பான உணர்வைப் பிரதிபலிக்கும் வேவ்ஸ்-சில் இளம் படைப்பாளிகளின் முக்கியப் பங்கை அவர் எடுத்துரைத்தார். நாட்டின் இளைஞர்களின் உற்சாகம் குறித்தும் வளர்ந்து வரும் படைப்புப் பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பு குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதை நோக்கி முன்னேறும்போது இது ஒரு முக்கிய நிகழ்வு என்று அவர் தெரிவித்தார்.
“நீங்கள் ஒரு இளம் படைப்பாளியாக இருந்தாலும் அல்லது கலைஞராக இருந்தாலும், பாலிவுட் அல்லது பிராந்திய சினிமாவுடன் தொடர்புடையவராக இருந்தாலும், தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த ஒரு தொழில்முறை நிபுணராக இருந்தாலும், அனிமேஷன், கேமிங்கில் நிபுணராக இருந்தாலும் அல்லது பொழுதுபோக்கு தொழில்நுட்பத்தில் ஒரு கண்டுபிடிப்பாளராக இருந்தாலும், வேவ்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இருக்க உங்களை ஊக்குவிக்கிறேன்” என்று பிரதமர் கூறினார்.
வேவ்ஸ் உச்சி மாநாடு இந்தியாவின் படைப்பாற்றல் திறமைகளுக்கான உலகளாவிய தளமாக செயல்படவும், ஒத்துழைப்புகளை வளர்க்கவும், உலகத் தரம் வாய்ந்த உள்ளடக்க உருவாக்கத்திற்கான மையமாக நாட்டின் திறனைக் காண்பிக்கவும் தயாராக உள்ளது. அனிமேஷன், கேமிங், பொழுதுபோக்கு தொழில்நுட்பம், பிராந்திய, பிரதான சினிமா ஆகியவற்றில் இந்தியாவின் முன்னேற்றங்களையும் இது எடுத்துக்காட்டும். இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் , ஊடகம், பொழுதுபோக்கில் உலகளாவிய தலைமைத்துவமாக அதன் நிலையை உறுதிப்படுத்துவதற்கும் அரசின் உறுதிப்பாட்டை இது எடுத்துக் காட்டுகிறது.
சினிமா ஜாம்பவான்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர்களை கௌரவித்தல்:
2024-ம் ஆண்டில் இந்திய சினிமாவின் பல புகழ்பெற்ற நபர்களின் 100 வது பிறந்த நாளையும் பிரதமர் குறிப்பிட்டார். ராஜ் கபூர், முகமது ரஃபி, அக்கினேனி நாகேஸ்வர ராவ், தபன் சின்ஹா ஆகியோர் குறித்து பிரதமர் குறிப்பிட்டார் . இந்த ஜாம்பவான்கள் இந்திய சினிமாவின் பொற்காலத்தை வடிவமைத்தது மட்டுமின்றி, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை வலுப்படுத்தியதாகவும் திரு நரேந்திர மோடி கூறினார்.