சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து, டிஜிட்டல்மயமாக்கல் மூலம் வேளாண் விரிவாக்க முறையின் செயல்திறனையும் வலிமையையும் மேம்படுத்தும் விஸ்தார் திட்டத்தில் இணைந்து செயல்பட உள்ளது.
விவசாய விரிவாக்க முறையை மேலும் வலுப்படுத்துவதற்கான முன்னோடித் திட்டம்தான் விஸ்தார்.
புதிய தயாரிப்புகளையும் சேவைகளையும் சந்தைக்குக் கொண்டு வருவதற்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புகளையும் திறன்களையும் ஸ்டார்ட்-அப்கள் வழங்குகின்றன. விவசாயத் துறையில் உள்ள சூழல் காரணமாக, விநியோகம்- தேவை ஆகிய இருபக்கமும் சேவை வழங்கும் தனித்துவமான வாய்ப்பு ஸ்டார்ட்அப்களுக்கு கிடைத்துள்ளது. விவசாயம் மற்றும் சார்புடைய துறைகளில் உள்ளவர்களுக்கு தொழில்நுட்பங்கள்- கண்டுபிடிப்புகள் மூலம் பயனடையச் செய்வதுடன், செயல்திறன்- உற்பத்தித் திறனை மேம்படுத்தி சந்தைத் தகவல்களுக்கு உதவிடவும் முடியும்.
ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள ஸ்டார்ட்அப் மற்றும் ரிஸ்க் பைனான்சிங் குறித்த ஆராய்ச்சி மையமும் ஒய்நோஸ் வென்ச்சர் இன்ஜின் எனப்படும் ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து இந்திய ஸ்டார்ட்அப் அமைப்புமுறை தொடர்பான விரிவான தகவல்களை உருவாக்கியுள்ளன.
விவசாயம் மற்றும் சார்புடைய துறைகளில் ஸ்டார்ட்அப்கள் பற்றிய தகவல்களை விஸ்தார் தளத்தில் இடம்பெறச் செய்வது தொடர்பாக வேளாண் அமைச்சகம் ஐஐடி மெட்ராஸ் இடையே சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த துறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் ஸ்டார்ட்அப்களின் திறன்கள், சலுகைகள் குறித்து தெரிந்துகொண்டு அவற்றை எளிதாக அணுக முடியும்.
இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஐஐடி மெட்ராஸ் ஸ்டார்ட்அப் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பேராசிரியர் ஏ.தில்லைராஜன் கூறும்போது, “இந்தியாவின் சமூக– பொருளாதாரத் துறையின் முதுகெலும்பாக விவசாயம் அமைந்துள்ளது. எனவே, விவசாயத் துறையை வலுப்பெறச் செய்ய உறுதியான கொள்கைகள் அவசியமாகின்றன. விவசாயம் சார்ந்த துறைகளின் மதிப்புச் சங்கிலி முழுவதிலும் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வருவதில் ஸ்டார்ட்அப்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன” எனக் குறிப்பிட்டார்.
ஐஐடி மெட்ராஸ் மேலாண்மைக் கல்வித் துறையின் ஆசிரியராகவும் உள்ள பேராசிரியர் தில்லைராஜன் கூறும்போது, “ஐஐடி மெட்ராஸ்–ல் உள்ள ஸ்டார்ட்அப் மற்றும் ரிஸ்க் பைனான்சிங் மையமும், ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான ஒய்நோஸ் வென்ச்சர் இன்ஜின் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்டார்ட்அப் தகவல் தளத்தில், விவசாயம் மற்றும் வேளாண் துறை தொடர்புடைய ஏறத்தாழ 12,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வளமான தகவல்கள் இருதரப்பு ஒத்துழைப்பின் வாயிலாக விவசாயிகளை எளிதில் சென்றடைவதுடன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் விரிவாக்க சேவைளின் செயல்திறனுக்கு கணிசமான பங்களிப்பை வழங்கும்” எனத் தெரிவித்தார்.
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணைச் செயலர் (விரிவாக்கம்) திரு. சாமுவேல் பிரவீன் குமார் கூறுகையில், “வேளாண் ஸ்டார்ட்–அப்களின் புதுமையான தொழில்நுட்பங்கள் விவசாயத்தை நிலைத்து நிற்கவும், காலநிலையைத் தாங்கக்கூடியதாகவும் மாற்றுவதற்கு பங்களிக்கின்றன. எனவே வேளாண் ஸ்டார்ட்அப்களின் தொழில்நுட்பத்தை விரிவாக்கம் மூலம் விவசாயிகளுடன் இணைப்பது என்பது அணுகல்– பின்பற்றுதல் கண்ணோட்டத்தில் மிக முக்கியமானதாகும். ஐஐடிஎம் உடனான ஒத்துழைப்பு நிச்சயமாக அதற்கு வழி வகுக்கும். விவசாய விரிவாக்கத்திற்கான VISTAAR DPI மூலம் இந்த நோக்கம் நிறைவேறும்” எனத் தெரிவித்தார்.
தற்போதுள்ள செயல்பாடுகளை டிஜிட்டல்மயமாக்குவதன் மூலம் கணிசமான அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடியும். பயிர் உற்பத்தி, சந்தைப்படுத்தல், மதிப்பு, விநியோகச் சங்கிலி மேலாண்மை ஆகியவற்றில் உயர்தர ஆலோசனைகளை ஒவ்வொரு விவசாயியும் அணுக முடியும். விவசாயம், கிராமப்புற மேம்பாடு உட்பட தொடர்புடைய துறைகள் பற்றிய அனைத்து அரசாங்கத் திட்டங்களைப் பற்றிய தகவல்களையும் பெற முடியும்.
விவசாயம் மற்றும் சார்புடைய துறைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சரியான நேரத்தில், சரியான சூழலில் துல்லியமான தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்க வேண்டியிருக்கிறது. எனவே தற்போதைய விவசாய விரிவாக்க முறையை மேம்படுத்த டிஜிட்டல்மயமாக்குதல் அவசியமாகிறது.