மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம், மருத்துவ ஜவுளிகளுக்கான தரக் கட்டுப்பாட்டு ஆணையை (QCO) வெளியிட்டுள்ளது. மருத்துவ ஜவுளி (தரக் கட்டுப்பாடு) ஆணை, 2024-ன் கீழ் வரும் முக்கியத்துவம் வாய்ந்த தயாரிப்புகளின் பாதுகாப்பு, செயல்திறனை உறுதி செய்வதற்காக அதற்கான சோதனை நெறிமுறைகள், முத்திரையிடல் தேவைகள் உள்ளிட்ட கடுமையான தரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
சிறு, நடுத்தர நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரத்யேகமான சவால்களை அங்கீகரிக்கும் வகையில், மத்திய அமைச்சகம் இந்த தரக்கட்டுப்பாடுகளுக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. 2025-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை (சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு), குறிப்பாக இந்த உத்தரவின் அட்டவணை A-ன் கீழ் 03 பொருட்களுக்கு, அதாவது சானிட்டரி நாப்கின்கள், பேபி டயப்பர், மீண்டும் பயன்படுத்தக்கூடிய சானிட்டரி பேட் / சானிட்டரி நாப்கின் / மாதவிலக்கு உள்ளாடைகள் போன்ற தயாரிப்புகளுக்கு இது பொருந்தும். இந்த சலுகை சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை எவ்வித சமரசமின்றி புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க உதவிடும்.
மேலும், சுமூகமான மாற்றத்தை எளிமையாக மேற்கொள்வதற்கு, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு 6 மாத காலக்கெடு, அதாவது 2025-ம் ஆண்டு ஜூன் 30 தேதி வரை தரப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள கையிருப்புகளை விற்பனை செய்வதற்கான இடைக்கால அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடு இடையூறு ஏதுமின்றி புதிய தர நிலைகளை மேற்கொள்ள தொழில்துறைக்கு உதவிடும்.
இந்த நடவடிக்கைகள் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், செயல்திறனை அதிகரிக்கவும், சுகாதாரத் தொழில், நுகர்வோருக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. மத்திய ஜவுளி அமைச்சகம் தரமான தொழில்துறை தயாரிப்புகளை உறுதி செய்வதற்கு உதவிடும்.