Sunday, December 14 2025 | 03:37:09 PM
Breaking News

பிரதமர், கானா அதிபரைச் சந்தித்தார்

Connect us on:

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கானா அதிபர் டாக்டர் ஜான் டிராமணி மகாமாவைச் சந்தித்தார். ஜூபிலி ஹவுஸுக்கு வந்த பிரதமரை, அதிபர் திரு மகாமா வரவேற்றார். இந்திய பிரதமர் ஒருவரின் கானா அரசுமுறைப்  பயணம் 30 ஆண்டுகளில் இது முதல் முறையானதாகும்.

இரு தலைவர்களும் பிரதிநிதிகள் அளவிலான விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இருதரப்பு உறவை மேம்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். இரு தலைவர்களும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையேயான காலத்தால் மாறாத உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம், முதலீடு, விவசாயம், திறன் மேம்பாடு, டிஜிட்டல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதித்தனர். கானாவில் வளர்ந்து வரும் இருதரப்பு வர்த்தகத்திற்கும் இந்திய முதலீடுகளுக்கும் அவர்கள் வரவேற்பு தெரிவித்தனர். பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர். குறிப்பாக இந்தியாவின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் உள்கட்டமைப்பு, திறன் மேம்பாடு திட்டங்கள் மூலம் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டனர். சுகாதாரம், மருந்து, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, யுபிஐ, திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியா முன்வந்துள்ளது. உலகளாவிய தென்பகுதி நாடுகளின் கவலைகளை வெளிப்படுத்துவதில் இந்தியாவின் ஆழ்ந்த உறுதிப்பாட்டை பிரதமர் வெளிப்படுத்தினார். இந்த விஷயத்தில் கானாவின் ஒத்துழைப்புக்கு  பிரதமர் நன்றி தெரிவித்தார். கானாவில் உள்ள 15,000 இந்திய சமூகத்தினரை பாதுகாப்பதற்காக அந்நாட்டு அதிபர் மகாமாவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

ஐ.நா. சீர்திருத்தங்கள் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அதிபர் திரு மகாமா அளித்த ஆதரவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அதன் பதவிக்காலம், காமன்வெல்த் பொதுச்செயலாளராக கானாவின் வெளியுறவு அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டது உட்பட கானாவின் சர்வதேச பங்களிப்பிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். ஜனநாயக மதிப்புகள், தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்பு, நிலையான வளர்ச்சி, உலக அமைதிக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றிற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கலாச்சாரம், தரநிலைகள், ஆயுர்வேதம், பாரம்பரிய மருத்துவம், வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையிலான ஈடுபாட்டிற்கான கூட்டு ஆணைய வழிமுறை ஆகியவற்றில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பிரதமரை கௌரவிக்கும் வகையில் கானா அதிபர் திரு மகாமா, அரசுமுறை விருந்தை பிரதமருக்கு அளித்து கௌரவித்தார். அவரது அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவுக்கு வருகை தருமாறு அதிபர் திரு மகாமாவுக்கு அழைப்பு விடுத்தார்.

About Matribhumi Samachar

Check Also

இணையதள பாதுகாப்பு கட்டமைப்பு குறித்து வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடல்

மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்திய கணினி அவசரகால பதிலளிப்பு குழுவான சிஇஆர்டி-ஐஎன், வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்காக இணைய பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் அமர்வை புதுதில்லியில் நேற்று (டிசம்பர் 12, 2025) நடத்தியது. இந்த அமர்விற்கு புதுதில்லியில் உள்ள சிஇஆர்டி-ஐஎன்-னின் தலைமை இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாஹ்ல் தலைமை வகித்தார். தகவல் …