Tuesday, January 07 2025 | 03:30:19 AM
Breaking News

என்ஐடிடி குளோபல் நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Connect us on:

இன்று நடைபெற்ற என்ஐடிடி குளோபல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 2025- ல் உலகம் முழுவதிலுமிருந்து 1,500 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் டாடா குழுமத்தின் தலைவர் டாக்டர். என்.சந்திரசேகரன்,  தமிழக அரசின் ஐடி மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இந்நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்தில், தற்போதைய மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், நிறுவனத்தின் தாக்கத்தை மேம்படுத்துவதற்குமான முன்முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது வெளியான  சில முக்கிய அறிவிப்புகள் வருமாறு;

● தத்தெடுப்புத் திட்டம்: மாணவர்களின் கல்விச் சுமைகளைக் குறைக்க நிதி உதவி.

● தொழில்முனைவோர் மேம்பாடு: தொழில் முனைவோர் திறமை மற்றும் தொழில் ஒத்துழைப்புகளை வளர்ப்பதற்காக வளாகத்தில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மையத்தை நிறுவுதல்.

● உலகளாவிய பரிவர்த்தனை திட்டங்கள்: மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கும் சர்வதேச நிறுவனங்களுடன் பயிற்சியில் ஈடுபடுவதற்கும் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்.

● அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ 100 கோடி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டு, இந்த முயற்சிகள் ஸ்காலர்ஷிப்கள், ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் தொடக்க முயற்சிகளை ஆதரிக்கும்,

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். என். சந்திரசேகரன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் உலகளாவிய சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எடுத்துரைத்தார்.  “புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டாலும், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்கள் போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக உலகளாவிய கார்பன் உமிழ்வு இலக்கு ஒரு சவாலாகவே உள்ளது.” என்று அவர் கூறினார்.

டாக்டர். பழனிவேல் தியாகராஜன், என்ஐடி திருச்சியின் நிறுவன கலாச்சாரத்தைப் பாராட்டினார், “பண்பு, விடாமுயற்சி மற்றும் சிறந்து விளங்கும் நிறுவனத்தின் திறனை வெளிப்படுத்தும் பல்வேறு துறைகளில் முன்னாள் மாணவர்களின் வெற்றியைப் பார்ப்பது குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் கூகுள் நிறுவனத்தின் தலைமை வர்த்தக உத்தியாளர் கோபி கல்லயில், ஜுஸ்பேயின் நிறுவனர் ஆர்.வி.ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எதிர்கால தலைமுறை தலைவர்களுக்கான பாதைகளை உருவாக்குவது, புதுமை, சிறப்பின் மையமாக நிறுவனத்தின் பங்கை மேம்படுத்துவது ஆகியவை  குறித்து விவாதங்கள் நடைபெற்றன.

About Matribhumi Samachar

Check Also

சென்னை ஐஐடி, ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழமற்ற கடல்அலைப் படுகை ஆராய்ச்சிக் கூடத்தை தொடங்கியுள்ளது

  சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய ஆராய்ச்சி மற்றும் தொழில்துறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய …