திரைப்பட தணிக்கை நடைமுறைகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் உறுதி செய்துள்ளது. ஒளிப்பதிவு (சான்றிதழ்) விதிகள் 2024-ன் படி, வாரியம் மற்றும் ஆலோசனைக் குழுக்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இடம் பெற வேண்டும் என்பது கட்டாயமாகும். மேலும், திரைப்படங்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்படும் ஒவ்வொரு ஆய்வுக் குழு மற்றும் மறுசீராய்வுக் குழுவிலும் 50% பெண்கள் இருப்பதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் உறுதி செய்து வருகிறது.
வாரிய உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒளிப்பதிவு சட்டம் 1952-ன் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதன்படி, ஒரு உறுப்பினரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் வரை இருக்கும். புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படும் வரை தற்போதைய உறுப்பினர்கள் பதவியில் தொடருவர்.
வாரிய உறுப்பினர்களுடனான கூட்டங்களை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் இணையவழியில் நடத்துகிறது. சான்றிதழ் வழங்கும் நடைமுறைகள் அனைத்தும் 2017-ம் ஆண்டு முதல் ‘இ-சினிபிரமான்’ தளம் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் சமர்ப்பித்தல், பரிசீலனை மற்றும் ஒப்புதல் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகின்றன. சமர்ப்பிக்கப்படும் படங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, காலதாமதமின்றி சான்றிதழ் வழங்கும் வகையில் ஆய்வுக் குழுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
திரைப்படத்தின் தலைப்பு, மொழி, கால அளவு, தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் போன்ற அடிப்படை விவரங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் க்யூஆர் குறியீடு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, தரவுப் பாதுகாப்பு, அமைப்பின் ஒருமைப்பாடு மற்றும் தனியுரிமை விதிகளுக்கு இணங்க, ‘இ-சினிபிரமான்’ தளத்திலுள்ள க்யூஆர் குறியீட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த மாற்றங்கள் பொதுமக்கள் அத்தியாவசியமான சான்றிதழ் தகவல்களைப் பெறுவதை எந்த வகையிலும் பாதிக்காது.
மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தனது வருடாந்தர அறிக்கையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் ஆண்டுதோறும் சமர்ப்பிக்கிறது. இந்தத் தகவல்கள் அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.
மாநிலங்களவையில், உறுப்பினர் திருமதி சாகரிகா கோஷ் எழுப்பிய கேள்விக்கு, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
Matribhumi Samachar Tamil

