அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு ஜேக் சல்லிவன் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டணியில், குறிப்பாக தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, சிவில் அணுசக்தி, தூய்மையான எரிசக்தி, குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு ஆகிய முக்கிய துறைகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அவர்கள் மதிப்பீடு செய்தனர்.
குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்காக 2024 செப்டம்பரில் அமெரிக்கா சென்றது உட்பட அதிபர் திரு பைடனுடனான தனது பல்வேறு சந்திப்புகளை நினைவு கூர்ந்த பிரதமர், நீடித்த பாரம்பரியத்திற்கான இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய உத்திசார்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் அதிபர் திரு பைடனின் பங்களிப்புகளைப் பாராட்டினார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் தன்னிடம் ஒப்படைத்த அதிபர் திரு பைடன் எழுதிய கடிதத்தை பிரதமர் மிகவும் பாராட்டினார்.
இரண்டு நாடுகளின் மக்களின் நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் இரண்டு ஜனநாயக நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்ற தமது உறுதிப்பாட்டை பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அதிபர் திரு பைடன் மற்றும் முதல் குடிமகள் டாக்டர் ஜில் பைடன் ஆகியோருக்கு பிரதமர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.