மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான், தேசிய சமையல் எண்ணெய்கள் இயக்கம் -பனை எண்ணெய் (NMEO-OP) திட்டத்தின் கீழ் உற்பத்திக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தியுள்ளார். சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடைவது, இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைப்பது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது போன்ற நாட்டின் தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில் இந்த சமையல் எண்ணெய்களுக்கான இயக்கம் செயல்படுகிறது.
உள்நாட்டு சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கம், 2025-26-ம் ஆண்டுக்குள் 6.5 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பனை மரங்களை வளர்க்க வழிவகை செய்கிறது. வடகிழக்கு பிராந்தியத்திலும், பனை மரங்கள் வளரும் பிற மாநிலங்களிலும் வேளாண் உற்பத்திக்கான பருவநிலை திறனை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.
சில பிராந்தியங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்த போதிலும், நாட்டின் மற்ற பகுதிகளில் இதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமையல் எண்ணெய் உற்பத்தியில் தற்சார்பை அடைவதற்கு ஒருங்கிணைந்த முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மத்திய அமைச்சர், இந்த இயக்கத்தின் இலக்குகளை அடைவதில் மத்திய, மாநில அரசுகள், செயல்படுத்தும் முகமைகள் மற்றும் விவசாயிகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்தார்.