தமிழ்நாடு அஞ்சல் வட்டம், 2025 குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் வழங்கும் ‘Republic Day at Home-2025’ எனும் பெருமை மிகு நிகழ்வுக்கான அழைப்பிதழ்களை பட்டுவாடா செய்யும் பணியில், அதன் ஒருங்கிணைந்த பங்களிப்பை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்த குறிப்பிடத்தகுந்த நிகழ்வு ஜனவரி 26,2025 அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இந்த அழைப்பிதழ்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆயுஷ் மருத்துவர்கள், விவசாயிகள், ஆசிரியர்கள், எரிசக்தி பாதுகாப்பு வாகையர்கள், அரசுத் திட்டத்தின் பயனாளர்கள் மற்றும் தத்தமது களங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய பொதுமக்களுக்கும் வழங்கப்பட இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, துல்லியமாக உரிய நபரிடம் அவற்றை பட்டுவாடா செய்ய தமிழ்நாடு அஞ்சல் வட்டம் உறுதிபூண்டுள்ளது. பெருமைமிகு இப்பணியை செய்ய, அர்ப்பணிப்புமிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழு ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம் சென்று சேர்வதை உறுதிசெய்யும்.
அர்ப்பணிப்போடு கூடிய சேவை புரிந்த இச்சாதனையாளர்கள் மற்றும் அரசு திட்டங்களின் பயனாளிகளின் செயலை அங்கீகரிக்கும் விதமாகவும், அவர்களுக்கு நாட்டின் நன்றியைக் கோடிட்டுக் காட்டும் விதமாகவும், அவர்கள் இந்த பெருமை மிகு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு அஞ்சல் வட்டம் ஒவ்வொரு அழைப்பிதழையும் கையாள்வதில் பெருமிதம் கொள்வது மட்டுமின்றி இவ்வழைப்பிதழ்களை வழங்கிய அலுவலகமும், பெறுநர்களும் முழு திருப்தி அடைவதை உறுதி செய்வதும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு அழைப்பிதழும் உரிய நேரத்தில், உரிய நபரிடம், வழங்கப்படுவதை உறுதி செய்ய, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் மற்றும் மண்டலங்கள் முக்கிய பங்களிப்பை ஆற்றி வருகின்றன . இச்சாதனையாளர்களுக்கு மரியாதை செய்யக் கிடைத்த இந்த வாய்ப்பு, நம்நாட்டிற்கு ‘நம்பகமான சிறந்த சேவை’ அளிக்க அஞ்சல்துறை கொண்டுள்ள உறுதியை மேலும் வலுப்படுத்துகிறது.