தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு மற்றும் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள்/ குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த சுற்றுச்சூழல் குறித்த மண்டல மாநாடு 2025, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நிறைவடைந்தது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டின் நிறைவு விழாவில், நிறுவன ஒருமைப்பாடு, கொள்கை முதல் செயல் வரையிலான அமலாக்கம் மற்றும் எதிர்வினையிலிருந்து தடுப்பு சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கு மாறுதல் முதலியவற்றின் வலிமையான முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது தொழில்நுட்ப நிர்பந்தம் மட்டுமல்ல, இது ஒரு அரசியலமைப்பு உத்தரவாதம் என்று கூறினார். ஒழுங்குமுறை கட்டமைப்புகள் அவ்வப்போது தோல்வியடைவதற்கு போதுமான சட்டங்கள் இல்லாதது காரணம் அல்ல, மாறாக நிறுவனங்கள் சட்டங்களை செயல்படுத்த தயங்குவது தான் காரணம் என்று அவர் வலியுறுத்தினார். நிறுவன வலிமைப்படுத்தல், ஒருங்கிணைந்த நிர்வாக கட்டமைப்பு, ஆதாரங்களின் அடிப்படையிலான அமலாக்கம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் குடிமக்களின் பங்கேற்பு/ நடத்தை மாற்றம் ஆகிய ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் நம்பகமான முன்னோக்கிய பாதையை நீதிபதி மகாதேவன் சுட்டிக்காட்டினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்திய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திரு ஏ.ஆர்.எல். சுந்தரேசன் தனது உரையில், சுற்றுச்சூழல் நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்த ஒத்திவைப்பும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி, இணக்கத்தின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா, மாநாட்டில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அடிமட்ட அளவில் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே நேர்மறையான விளைவுகள் கிடைக்கும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹூ, கொள்கையையும் செயலையும் ஒன்றாக இணைப்பதே இன்றைய பிரதான சவாலாக உள்ளது என்று கூறினார்.
Matribhumi Samachar Tamil

