மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு சிராக் பாஸ்வான் இன்று கிரேட்டர் நொய்டாவில் உள்ள எக்ஸ்போ மையத்தில் இண்டஸ்ஃபுட் 2025-ன் 8-வது பதிப்பைத் தொடங்கி வைத்தார். பாபா ராம்தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். டிபிசிஐ தலைவர் திரு மோஹித் சிங்லா, அபீடா தலைவர் திரு அபிஷேக் தேவ், பிகாரம் சந்த்மாலின் நிர்வாக இயக்குநர் திரு ஆஷிஷ் அகர்வால், எவரெஸ்ட் உணவுப் பொருட்கள் நிறுவன இயக்குநர் திரு ஆகாஷ் ஷா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து புகழ்பெற்ற விருந்தினர்கள், தொழில்துறை தலைவர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சர் திரு பாஸ்வான் தனது உரையில், “பல ஆண்டுகளாக, இண்டஸ்ஃபுட் கண்காட்சியானது இந்தியாவின் மிகச்சிறந்த மற்றும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. உணவு பதனப்படுத்தும் துறைக்கு சர்வதேச சந்தை இணைப்புகளை வழங்குவதுடன், இந்தியாவின் ஏற்றுமதிக்கு வலுவான உத்வேகத்தையும் வழங்குகிறது என்று கூறினார்.
“வளர்ந்து வரும் வாழ்க்கை முறை மற்றும் மாறிவரும் குடும்ப கட்டமைப்புகள் காரணமாக; பதனப்படுத்தப்பட்ட உணவுத் தேவை பல மடங்கு அதிகரிக்கும். இது வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. இந்தியாவை ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ ஆக மாற்றுவதற்கான பிரதமரின் பார்வை மற்றும் தீர்மானத்திற்கு தொழில்துறையின் பதனப்படுத்தப்பட்ட உணவுப் பிரிவு முக்கிய பங்களிப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்திய உணவு வகைகள் உலகம் முழுவதும் பரவவும், ஒவ்வொரு உணவு மேசைக்கும் சென்றடையவும் வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார். நமது வேளாண் மற்றும் உணவு ஏற்றுமதியை உலக அளவில் அதிகரிக்க வேண்டும் என்ற சிந்தனையுடன் நாம் முன்னேறி வருகிறோம் என்று அவர் கூறினார்.
உணவுப் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்த அமைச்சர், “உணவின் சுவைக்கு சமமாக உணவுப் பாதுகாப்பும் முக்கியமானது. அதிக இணக்கத்தை உறுதி செய்வதற்காக எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ விரைவில் ஒரு ஒழுங்குமுறை உச்சிமாநாட்டை நடத்தும். மத்திய பட்ஜெட்டில் கட்டாயப்படுத்தப்பட்டு உள்ள நியதியின்படி உணவு சோதனை ஆய்வகங்களைத் திறந்துள்ளோம். அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 100 புதிய சோதனை ஆய்வகங்கள் சேர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.