மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னை இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் செயல்படும் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் 6-வது பட்டமளிப்பு விழா இன்று (08 ஜனவரி 2025) நடைபெற்றது.
இவ்விழாவில் தோல் ஏற்றுமதி கழகத்தின் தென்னக பிராந்திய தலைவர் திரு அப்துல் வஹாப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
2020-ம் ஆண்டின் இளநிலை மற்றும் 2022-ம் ஆண்டின் முதுநிலை, காலணி வடிவமைப்பு, ஃபேஷன் தொழில்நுட்பம் துறையை சேர்ந்த 82 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும், சிறப்பு விருந்தினர் வழங்கினார்.
பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்திய சிறப்பு விருந்தினர், இதுநாள்வரையிலான உங்களது கடின உழைப்பின் பரிசு இந்தப் பட்டம் என்றும், இதுவே உங்களின் வெற்றிப்பயணத்தின் தொடக்கம் என்றும், மென்மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும், உங்கள் பெற்றோர் மற்றும் நாட்டுக்கு பெருமை தேடித்தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
காலணி உற்பத்தி தொழிலில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும், மத்திய, மாநில அரசுகளின் சிறப்பான முன்முயற்சிகளால் சென்னை தவிர இரண்டாம் நிலை நகரங்களான பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, பனப்பாக்கம், செய்யார் போன்ற ஊர்களிலும் காலணி உற்பத்தி தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய தயாரிப்புகள் (பிராண்ட்) உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன என்று கூறிய அவர், இந்தத் துறையில் சிறப்பான எதிர்காலம் உள்ளதாகத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தரேசன், ஃபேஷன் தொழில்முனைவோரான எக்ஸ்எக்ஸ்எல் டினா வின்சென்ட், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.