மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மை பாரத் (என்ஒய்கேஎஸ்) உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து 16 வது பழங்குடியின இளைஞர் பரிமாற்ற முகாமை சென்னையில் நடத்துகின்றன. இந்த முகாமினை இன்று (08/02/2015) ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து 220 பழங்குடியின இளஞர்கள் கலந்துகொள்கின்றனர். நாட்டின் பல தரப்பட்ட கலாச்சார பாரம்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். அவர்களின் கற்றல் திறனையும் வளர்க்க உதவும் என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியை துவக்கிவைத்து ஆளுநர் உரையாற்றுகையில், தமிழ்நாடு அனைத்து துறைகளும் முன்னேறிய மாநிலமாகத் திகழ்வாதாகவும், தமிழ்மொழி மிகவும் தொன்மையான மொழி என்றும், இங்கிருக்கும் நாட்களில் தமிழ் மொழியின் சில வார்த்தைகளை கற்றுக்கொள்ளுமாரும் கேட்டுக்கொண்டார்.
நம் நாடு வளர்ச்சியடைந்த நாடாக மாற வேண்டும் என்றால் நாட்டின் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியும் முக்கியமானது அந்த வகையில் பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்படுவதாகவும், குறிப்பாக பாதிப்படையக்கூடிய பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல சிறப்பு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு இரண்டு தாரக மந்திரங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், ஒன்று பெரிய கனவு என்றும் ,இரண்டாவது அந்தக் கனவை நனவாக்க கடின உழைப்பு என்றும் ஆளுநர் தெரிவித்தார்..
மேலும் இந்நிகழ்ச்சியில் பழங்குடி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன, அப்போது ஆளுநர் மாணவர்களுடன் இணைந்து நடனம் ஆடினார்.
நிகழ்ச்சியில் மை பாரத் (என் ஒய் கே எஸ்) தமிழ்நாடு மாநில இயக்குனர் எஸ். செந்தில் குமார், வருமான வரித்துறை ஆணையர் (பரிமாற்ற விலை நிர்ணயம்) ஜெ. பிரேமானந்த், உள்துறை அமைச்சகத்தின் உதவிச் செயலர் ரஜினிஷ் குமார் மற்றும் சாய்ராம் கல்விக் குழுமத்தின் தலைமை செயலதிகாரி டாக்டர். சாய் பிரகாஷ் லியோ முத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
YCAN.jpeg)

Matribhumi Samachar Tamil

