பல்வேறு நாடுகளிடையே மோதல்கள், சவால்கள் நிறைந்துள்ள தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். இன்று (2025-ம் ஆண்டு ஜனவரி 10, -ம் தேதி) புதுதில்லியில் நடைபெற்ற வெளிநாட்டு தூதர்களின் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாடுகளிடையே பரஸ்பர வளம் மற்றும் அமைதியை உறுதிசெய்யும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். புவி சார் அரசியல் பதற்றங்களை சமாளிக்க ஏதுவாக உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
“அமைதி, வளம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்த கருத்து கொண்ட நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார். பதற்றமான சூழலும், மோதல் போக்குகளும் நீடித்தால் எதிர்கால சந்ததியினருக்கு பொருளாதார வளர்ச்சி அல்லது தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை ஏற்படும்” என்று திரு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
உலக அளவில், தென்பகுதியில் உள்ள நாடுகளின் குரலாக இந்தியா வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், மாறுபட்ட கருத்துக்கள் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்யும் பன்முகக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
Matribhumi Samachar Tamil

