பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜனவரி 15 அன்று மகாராஷ்டிர மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10.30 மணியளவில், ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். அதன்பிறகு, பிற்பகல் 3:30 மணியளவில், நவி மும்பையின் கார்கரில் இஸ்கான் கோயிலை அவர் திறந்து வைக்கிறார்.
பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பில் உலகளாவிய தலைமைத்துவமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் மூன்று முக்கிய கடற்படை போர் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. பி15பி ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதி கப்பலான ஐஎன்எஸ் சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன அழிப்புக் கப்பல்களில் ஒன்றாகும். இது 75% உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது. அதிநவீன ஆயுத-சென்சார் தொகுப்புகள், மேம்பட்ட கட்டமைப்புத் திறன்களை இக்கப்பல் கொண்டுள்ளது. பி17ஏ ஸ்டீல்த் ஃப்ரிகேட் திட்டத்தின் முதல் கப்பலான ஐஎன்எஸ் நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பி75 ஸ்கார்பீன் திட்டத்தின் ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வக்க்ஷீர், நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் இணைந்து கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, நவி மும்பையின் கார்கரில் ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி கோயிலை பிரதமர் திறந்து வைக்கிறார். ஒன்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் பல தெய்வங்களைக் கொண்ட கோயில், வேத கல்வி மையம், அருங்காட்சியகங்கள், அரங்கு, குணப்படுத்துதல் மையம் ஆகியவை அடங்கும். வேத போதனைகள் மூலம் உலகளாவிய சகோதரத்துவம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Matribhumi Samachar Tamil

