Monday, December 22 2025 | 02:13:13 PM
Breaking News

இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் உரையாற்றினர்

Connect us on:

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் இன்று அம்மான் நகரில் நடைபெற்ற இந்தியா-ஜோர்டான் வர்த்தக மன்றத்தில் உரையாற்றினர். இந்த மன்றத்தில் பட்டத்து இளவரசர் ஹுசைன் மற்றும் ஜோர்டான் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை ஜோர்டான் மன்னரும், பிரதமரும் ஏற்றுக்கொண்டனர். மேலும், இரு தரப்பிலிருந்தும் வந்திருந்த தொழிலதிபர்களை, சாத்தியக்கூறுகளையும் வாய்ப்புகளையும் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பாதையாக மாற்றிக்கொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஜோர்டானின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களையும் இந்தியாவின் பொருளாதார வலிமையையும் ஒருங்கிணைத்து, தெற்காசியா, மேற்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் ஒரு பொருளாதார வழித்தடத்தை உருவாக்க முடியும் என்று மன்னர் குறிப்பிட்டார்.

இந்த மன்றத்தில் உரையாற்றிய பிரதமர், ஜோர்டானும் இந்தியாவும் தங்களின் வலுவான நாகரிகத் தொடர்புகளின் உறுதியான அடித்தளத்தின் மீது கட்டப்பட்ட ஒரு துடிப்பான சமகால கூட்டு உறவைப் பகிர்ந்து கொள்கின்றன என்று குறிப்பிட்டார். மன்னரின் தலைமையின் கீழ், ஜோர்டான் சந்தைகளையும் பிராந்தியங்களையும் இணைக்கும் ஒரு பாலமாக மாறியுள்ளது என்றும், வணிகமும் வளர்ச்சியும் வளர்ந்து வருகிறது என்றும் அவர் பாராட்டினார். ஜோர்டானுடனான இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 5 பில்லியன் அமெரிக்க டாலராக இரட்டிப்பாக்க வேண்டும் என்று பிரதமர் முன்மொழிந்தார். உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா அடைந்துள்ள வெற்றியையும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் அது பயணிப்பதையும் பிரதமர் விளக்கினார்.  ஜோர்டானிய நிறுவனங்கள் இந்தியாவுடன் இணைந்து, அதன் 1.4 பில்லியன் நுகர்வோர் சந்தை, அதன் வலுவான உற்பத்தித் தளம் மற்றும் அதன் நிலையான, வெளிப்படையான, கணிக்கக்கூடிய கொள்கை சூழல் ஆகியவற்றின் பலன்களைப் பெறுமாறு அவர் அழைப்பு விடுத்தார். இரு நாடுகளும் இணைந்து உலகிற்கு நம்பகமான விநியோகச் சங்கிலிப் பங்காளிகளாக மாற முடியும் என்று பிரதமர் கூறினார். இந்தியப் பொருளாதாரத்தின் 8% க்கும் அதிகமான வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய அவர், இது உற்பத்தித்திறன் சார்ந்த நிர்வாகம் மற்றும் புதுமை சார்ந்த கொள்கைகளின் விளைவாகும் என்று வலியுறுத்தினார்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், நிதிநுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-ஜோர்டான் வணிக ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளையும் பிரதமர் எடுத்துரைத்தார். மேலும், இந்தத் துறைகளில் இணைந்து செயல்படுமாறு இரு நாடுகளின் புத்தொழில்  நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் துறைகளில் இந்தியாவின் வலிமையும், ஜோர்டானின் புவியியல் அனுகூலமும் ஒன்றுக்கொன்று ஆதரவாக அமையும் என்றும், இது ஜோர்டானை மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இந்தத் துறைகளில் ஒரு நம்பகமான மையமாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். விவசாயம், குளிர்பதனச் சங்கிலி, உணவுப் பூங்காக்கள், உரங்கள், உள்கட்டமைப்பு, ஆட்டோமொபைல்,  கலாச்சார சுற்றுலா ஆகிய துறைகளிலும் இருதரப்பினருக்கும் உள்ள வணிக வாய்ப்புகளையும் அவர் எடுத்துரைத்தார்.  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட  துறைகளில் இந்தியா-ஜோர்டான் வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரதமர் வலியுறுத்தினார்.

About Matribhumi Samachar

Check Also

பிரதமர் நரேந்திர மோடி – சுல்தான் ஹைதம் பின் தாரிக் சந்திப்பு

அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று மஸ்கட்டில் உள்ள ராயல் அரண்மனையில் அந்நாட்டின் சுல்தான் …