புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக இப்பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி பிரகாஷ் பாபு பங்கேற்றார். துணை மருத்துவப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கிய அவர், பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ஐ வடிவமைப்பதில் துணை மருத்துவப் பணியாளர்களின் முக்கியத்துவம் பற்றி அவர் எடுத்துரைத்தார்.

இந்த விழா இங்கு கூடியுள்ள இளைஞர்களுக்கு ஒரு மைல் கல்லாக அமைவது மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களுக்கும் மைல் கல்லாக அமைந்துள்ளது. பல ஆண்டு கடின உழைப்பு, உறுதிப்பாடு, கற்றல் ஆகியவற்றின் கொண்டாட்டமாக இந்த விழா விளங்குகிறது. நீங்கள் ஒவ்வொருவரும் தங்களின் பணியில் தியாகத்தையும், ஒழுக்கத்தையும், மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கு தளராத முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

சுகாதாரத்துறையில் நீங்கள் மருத்துவர்களுக்கு உதவி செய்பவர்கள் மட்டுமல்ல என்று குறிப்பிட்ட பேராசிரியர் பிரகாஷ் பாபு, சுகாதார நடைமுறையின் முதுகெலும்பாக விளங்குகிறீர்கள் என்றார். அவசரமான காலங்களில் முதலில் உதவி செய்பவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் அச்சமடையும் தருணங்களில் உங்களின் கருணைமிக்க குரல் குணமடைவதற்கு உதவுகிறது என்றும் அவர் கூறினார். கூட்டம் நிறைந்துள்ள மருத்துவமனை வார்டில் செவிலியர் நோயாளிகளுக்கு ஆறுதலாக செயல்படுகிறார் என்றும் காயமடைந்த ஒருவர் மீண்டும் செயல்பட இயன்முறை மருத்துவர் உதவி செய்கிறார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பரிசோதனைக் கூடத்தின் தொழில்நுட்பாளர் நோயைத் துல்லியமாகக் கண்டறிந்து தெரிவிக்கும் நிலையில், உங்களின் பணிகள் பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நிலையான ஆதரவு, வழிகாட்டுதல் ஆகியவற்றுக்காக கல்லூரி பேராசிரியர்களையும் பெற்றோர்களையும் தாம் பாராட்டுவதாக தெரிவித்த துணை வேந்தர், இந்தப் பட்டமளிப்பு விழாவின் கொண்டாட்டம் உங்களுடையது என்றார்.

Matribhumi Samachar Tamil

