
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி மெட்ராஸ்), ‘ஒய்டி ஒன்’ என்ற சக்கர நாற்காலியை உருவாக்கி அதை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவிலேயே மிகவும் எடை குறைந்த சக்கர நாற்காலி இது என ஐஐடி கூறியுள்ளது. இந்த ஒற்றை குழாய் திட அமைப்பு (‘மோனோ-டியூப் ரிஜிட் ஃபிரேம்’) சக்கர நாற்காலி உள்நாட்டிலேயே துல்லியமாகக் கட்டமைக்கப்பட்டதாகும்.
சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்ட ‘ஒய்டி ஒன்’, பயனாளிகளின் உடல் அமைப்புக்கும், அவர்களின் தினசரி செயல்பாட்டுத் தேவைகளுக்கும் ஏற்ப வடிவமக்கப்பட்டுள்ளது. 9 கிலோகிராம் எடை மட்டுமே கொண்ட இந்த சக்கர நாற்காலி, அதிகபட்ச வலிமையையும், திறனையும் கொண்டதாகும். கார்கள், ஆட்டோக்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் போன்றவற்றில் இதை கையாளுதல் மிக எளிதாக இருக்கும்.

அறிமுக நிகழ்ச்சியில் ஆயுதப் படை மருத்துவமனை சேவைகள் பிரிவு தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் அனுபம் கபூர் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, இந்த சக்கர நாற்காலி திட்ட ஒருங்கிணைப்பாளரும் சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியருமான டாக்டர் மணீஷ் ஆனந்த், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் விஞ்ஞானி டாக்டர் ரவீந்திரசிங் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஒய்டி ஒன்-ஐ அறிமுகம் செய்வதில் ட்ரிம்பிள் நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் 20 சக்கர நாற்காலிகளை வழங்கியுள்ளது. இதுதவிர எதிர்காலத்தில் தேவைப்படுவோருக்கு உதவ ஆர்ஆர்டி, ஸ்யூக்கோ இந்தியா ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
Matribhumi Samachar Tamil

