அரசுமுறைப் பயணமாக ஓமன் சென்றுள்ள இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று மஸ்கட்டில் உள்ள ராயல் அரண்மனையில் அந்நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார். அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு ஓமன் சுல்தான் உற்சாக வரவேற்பு அளித்ததோடு, சிறப்பான அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
இந்தச் சந்திப்பு குறித்துத் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
70 ஆண்டு கால நட்புறவு: இரு நாட்டுத் தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பிரதிநிதிகள் அளவிலும் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர். இந்தியா – ஓமன் இடையிலான பன்முகத் திறனை ஆய்வு செய்த அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் எட்டப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதைப் பெருமையுடன் நினைவு கூர்ந்தனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் : இரு நாடுகளுக்கும் இடையே ‘விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம்’ கையெழுத்தானது ஒரு மைல்கல் வளர்ச்சியாக இரு தலைவர்களாலும் வரவேற்கப்பட்டது. இருதரப்பு வர்த்தகம் 10 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேம்படுத்துவதோடு, ஏராளமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
ஆற்றல் மற்றும் விவசாய ஒத்துழைப்பு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் பசுமை அம்மோனியா திட்டங்கள் மூலம் எரிசக்தித் துறையில் புதிய உத்வேகத்தை அளிக்கத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் இணைந்த ஓமனுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும், விவசாய அறிவியல், கால்நடை பராமரிப்பு, மீன் வளர்ப்பு மற்றும் சிறுதானிய சாகுபடி ஆகியவற்றில் இணைந்து செயல்படவும் முடிவு செய்யப்பட்டது.
நிதி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம்: இந்தியாவின் ‘யுபிஐ’ மற்றும் ஓமனின் டிஜிட்டல் கட்டண முறை ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்துழைப்பு, ‘ரூபே’ (RUPAY) கார்டுகளை அங்கீகரித்தல் மற்றும் உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம்: கடல்சார் பாதுகாப்பில் இரு நாடுகளின் உறுதிப்பாட்டைத் தலைவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். ஓமனில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் நலனில் அக்கறை காட்டும் சுல்தானுக்குப் பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், கடல்சார் பாரம்பரியம், மொழி மேம்பாடு, இளைஞர் பரிமாற்றம் மற்றும் விளையாட்டுத் துறைகளில் புதிய முன்னெடுப்புகள் இரு நாட்டு மக்களின் பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொலைநோக்குப் பார்வை 2040: ஓமனின் ‘தொலைநோக்கு பார்வை 2040’ திட்டமும், இந்தியாவின் ‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான 2047’ இலக்கும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதை வரவேற்ற தலைவர்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாகச் செயல்பட உறுதி பூண்டனர். இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, கல்வி, விவசாயம், கடல்சார் பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Matribhumi Samachar Tamil

