குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (19.11.2025) புது தில்லியில் நடைபெற்ற டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் ஐந்தாவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில் உரையாற்றிய அவர், குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் சிறப்பாகத் திகழும் நிறுவனம் என டெல்லி தேசிய தொழில்நுட்பக் கழகத்தை பாராட்டினார். நவீன உள்கட்டமைப்பு, கல்வித் திறன் மேம்பாடு, பல்துறைகளில் கல்வி, ஆராய்ச்சி, புதுமைத்திறன் வளர்ப்பு, தொழில் நிறுவனங்களுடன் இணைப்பு போன்ற அம்சங்கள் மூலம் எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ப மாணவர்களை உருவாக்கும் பணியை நிறுவனம் செய்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் மேலும் கூறுகையில், தொழில்முனைவுத்திறனை ஊக்குவிக்கும் ஸ்டார்ட்-அப் மையமும், புதுமையான யோசனைகளை வணிக வாய்ப்புகளாக மாற்ற உதவும் இன்குபேஷன் மையமும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளன என்றார். இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களை வலுப்படுத்துவதுடன், புதிய வாய்ப்புகளை உருவாக்கும் திறனை வளர்க்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய தொழில்நுட்பக் கழகம் போன்ற உயர்தர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் ‘மாதிரி டிஜிட்டல் கிராமங்கள்’ உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்றும் மக்கள் பயன்பெறும் வகையில் எளிய தொழில்நுட்பங்களை உருவாக்குதல், டிஜிட்டல் திறன்களை கற்பித்தல் போன்ற துறைகளில் இந்நிறுவனங்கள் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.
பட்டம் பெறும் மாணவர்கள் தொடர்ந்து கற்றல், ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகியவற்றில் ஈடுபட்டு, சமூக முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். உண்மையான முன்னேற்றம் கண்டுபிடிப்பில் மட்டுமல்ல; அது சமூகத்தில் ஏற்படுத்தும் நல்ல விளைவுகளில் இருப்பதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

