Friday, December 05 2025 | 07:54:50 PM
Breaking News

ராஷ்டிரபதி தபோவனம் திறப்பு விழா, பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

Connect us on:

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று (20.6.2025) ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பங்கேற்றார். ராஷ்டிரபதி நிகேதனில் அமைக்கப்பட உள்ள ராஷ்டிரபதி தோட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர், பார்வையாளர் வசதி மையம், உணவகம், பத்திரிகை அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார். ராஷ்டிரபதி நிகேதனில் திறந்தவெளி அரங்கை நேற்று (19.06.2025) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன், ராஷ்டிரபதி உத்யான் ஆகியவை குறித்த கையேடு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த இடங்களில் உள்ள பல்வேறு உயிரினங்கள், இயற்கை தாவரங்கள் பற்றிய விவரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

டேராடூன் ராஜ்பூர் சாலையில் அமைந்துள்ள ராஷ்டிரபதி தபோவனம் 19 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. இதில் 117 வகையான செடிகளும், 52 வகையான வண்ணத்துப்பூச்சிகளும், 41 வகையான பறவை இனங்களும், 7 வகையான பாலூட்டி விலங்குகளும் இடம் பெற்றுள்ளன. இயற்கையான மூங்கில் காடுகள் இதன் சிறப்பம்சமாகும்.

21 ஏக்கரில் அமைந்துள்ள ராஷ்டிரபதி நிகேதனில் அல்லிக் குளங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள், பழத்தோட்டங்கள் போன்றவை உள்ளன. 132 ஏக்கர் நிலப்பரப்பில் ராஷ்டிரபதி தோட்டம் எனும் பொதுமக்களுக்கான பூங்கா அமைந்துள்ளது. ராஷ்டிரபதி தபோவனம் 2025 ஜூன் 24 முதலும் ராஷ்டிரபதி நிகேதன் 2025 ஜூலை 1 முதலும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியையொட்டி டேராடூனில் உள்ள பார்வை சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் தேசிய கல்விக் கழகத்திற்கு பயணம் செய்த குடியரசுத் தலைவர் அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாதிரிப் பள்ளியின் அறிவியல் சோதனைக் கூடம், கணினி சோதனைக் கூடம், கண்காட்சி ஆகியவற்றையும் அவர் பார்வையிட்டார்.

இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை மக்கள் நடத்தும் முறையிலிருந்து ஒரு நாடு அல்லது சமூகத்தின் வளர்ச்சி மதிப்பிடப்படும் என்றார். நமது கலாச்சாரத்திலும், நாகரீகத்திலும் மனிதகுல கருணையும், அன்பும் எப்போதும் இடம் பெற்றுள்ளன என்று அவர் கூறினார்.

இன்றைய சகாப்தம் அறிவியல் தொழில்நுட்ப சகாப்தம் என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், நவீன தொழில்நுட்ப உதவியுடன் மாற்றுத்திறனாளிகளும் நாட்டின் மைய நீரோட்டத்திற்கு பங்களிப்பு செய்ய முடியும் என்றார்.

About Matribhumi Samachar

Check Also

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே உள்ள பழமையான  கலாச்சார இணைப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நான்காவது …