இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பிரான்சின் ஆயுதப் பிரிவு தலைமை இயக்குநரகம் இடையே தொழில்நுட்ப அடிப்படையிலான ஆராய்ச்சிக் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . புதுதில்லியில் உள்ள மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் இன்று (20.11.2025) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத் மற்றும் பிரான்சின் தேசிய ஆயுதப் பிரிவு இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் கேல் டையஸ் டி டயூஸ்டா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் பாதுகாப்புத் துறையில் ஏற்படும் சவால்களுக்கு தீர்வு காணும் முறையில், புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கும் இரு நாடுகளின் துறை சார்ந்த நிபுணத்துவம் மற்றும் வள ஆதாரங்களை பயன்படுத்தும் வகையிலும் உத்திசார் கூட்டு நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சியில் திறன் மற்றும் அறிவுசார் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் இருநாட்டுப் பாதுகாப்புப் படையினரிடையே கூட்டுப்பயிற்சி, சோதனை நடவடிக்கைகள், தகவல் பரிமாற்றம், பயிலரங்குகள், கருத்தரங்குகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
Matribhumi Samachar Tamil

