இந்திய கடற்படை, அதன் சமீபத்திய ஸ்டீல்த் மல்டி-ரோல் போர்க்கப்பலான தமல் கப்பலை, 2025 ஜூலை 01 அன்று ரஷ்யாவின் கலினின்கிராட்டில், ரஷ்யாவிடம் இருந்து பெற்று, அதை செயல்படுத்திப் பணியில் இணைக்க உள்ளது. இந்த விழாவில் மேற்கு கடற்படை கட்டளையின் தலைமைத் தளபதி சஞ்சய் ஜே. சிங் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். பல இந்திய மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.
“தமல்” என்று பெயரிடப்பட்ட இது, கடந்த இருபது ஆண்டுகளாக ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட கிரிவக் வகுப்பு போர்க்கப்பல்களின் தொடரில் எட்டாவது ஆகும். தமல் என்பது துஷில் வகுப்பின் இரண்டாவது கப்பலாகும். இவை அவற்றின் முன்னோடிகளான தல்வார் மற்றும் டெக் வகைகளின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளாகும்.
மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் கீழ், கலினின்கிராட்டில் போர்க்கப்பல் மேற்பார்வைக் குழுவின் இந்திய நிபுணர்களால் தமலின் கட்டுமானம் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது. ரஷ்யாவின் கலினின்கிராட்டில் உள்ள யந்தர் கப்பல்கட்டும் தளத்தில் தமல் கட்டப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு ஏற்ப இந்தக் கப்பலில் 26% உள்நாட்டு அம்சங்கள் உள்ளன. அவற்றில் கடல் மற்றும் நில இலக்குகள் என இரண்டையும் குறிவைத்துத் தாக்கும் பிரம்மோஸ் நீண்ட தூர கப்பல் ஏவுகணையும் அடங்கும். இந்தக் கப்பல் முந்தைய கப்பல்களோடு ஒப்பிடும்போது அதன் ஆயுதக் களஞ்சியத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. அதாவது செங்குத்தாக தரையிலிருந்து விண்நோக்கி ஏவப்படும் ஏவுகணைகள், மேம்படுத்தப்பட்ட 100 எம்எம் துப்பாக்கி, நிலையான 30 எம்எம் சிஐடபிள்யூஎஸ், ஹெவிவெயிட் டார்பிடோக்கள், அவசர தாக்குதல் எதிர்ப்பு நீர்மூழ்கிக் கப்பல் ராக்கெட்டுகள் மற்றும் ஏராளமான கண்காணிப்பு மற்றும் தீ கட்டுப்பாட்டு ரேடார்கள் இதில் உள்ளன. தமல் மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விரிவான கடல் சோதனைகளைத் தொடர்ச்சியாக முடித்து தனது திறனை நிரூபித்துள்ளது.
கப்பலின் பெயரான தமல், இந்திரனால் போருக்குப் பயன்படுத்தப்பட்ட புராண வாளைக் குறிக்கிறது. இது நீண்டகால இந்திய-ரஷ்ய ஒத்துழைப்பு மற்றும் நட்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது.