இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சூரிய இயற்பியலாளர்கள் இந்த வாரம் பெங்களூரில் ஒன்றிணைந்து சூரிய காந்தவியல், சூரிய – நட்சத்திர இணைப்பு, விண்வெளி வானிலை போன்ற துறைகளில் ஆராய்ச்சி குறித்து விவாதித்தனர்.
கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகத்தின் 125 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ‘சூரியன், விண்வெளி வானிலை, சூரிய நட்சத்திர இணைப்புகள்’ குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆய்வகம் அதன் புகைப்பட படங்களின் களஞ்சியத்தின் மூலம் சூரியனின் செயல்பாடுகள், பூமியில் அதன் தாக்கம் ஆகியவை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கி வருகிறது.
இந்த மாநாட்டில் அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் பேராசிரியர் திரு அபய் கரண்டிகர், காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். சூரிய வானியற்பியல் கண்டுபிடிப்புகளில் புதிய எல்லைகளை அடைய இதுபோன்ற மாநாடுகள் உதவும் என்று அவர் தெரிவித்தார்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், ஐஐஏவின் நிர்வாகக் குழுவின் தலைவருமான திரு ஏ.எஸ்.கிரண் குமார், தொடக்க விழாவில் உரையாற்றிய போது, விண்வெளியில் இருந்து சூரிய இயற்பியல் ஆராய்ச்சிக்கு உதவுவதற்கான அனைத்து திறன்களையும் இஸ்ரோ கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
1899-ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய வான் ஆய்வகம் (கே.எஸ்.ஓ) சூரிய ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளது. ஆய்வகத்தின் தனித்துவமான அமைவிடம், அதன் அதிநவீன உபகரணங்கள் ஆகியவை சூரிய நிகழ்வுகள் பற்றிய ஆய்வுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்குகிறது.
Matribhumi Samachar Tamil

