குருகிராம் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் சாலைகளின் தூய்மை, பராமரிப்பு போன்றவை தொடர்பாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் 26.12.2025 அன்று விரிவான ஆய்வு நடத்தியது. சாலைகளில் தூசி, கட்டுமானக் கழிவுகள், திறந்தவெளிகளில் குப்பைகள் உள்ளிட்டவற்றை எரித்தல் நிகழ்வுகள் போன்ற சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தற்போது தில்லி தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக அமலில் உள்ள படிப்படியான பதில் செயல் திட்டத்தின் சட்டப்பூர்வ கட்டமைப்பின் கீழ் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஹரியானா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 15 குழுக்கள், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 2 குழுக்கள் என மொத்தம் 17 ஆய்வுக் குழுக்கள், குருகிராமில் மாநகராட்சி வரம்பிற்குட்பட்ட 125 சாலைப் பகுதிகளை ஆய்வு செய்தன. ஆய்வுத் தகவல்கள், புகைப்பட ஆவணங்களுடன் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆய்வு செய்யப்பட்ட 125 சாலைப் பிரிவுகளில், 34 பிரிவுகளில் அதிக அளவில் தூசி உள்ளதாகவும், 58 பிரிவுகளில் மிதமான தூசி உள்ளதாகவும், 29 பிரிவுகளில் குறைந்த அளவில் தூசி உள்ளதாகவும், 4 பிரிவுகளில் மட்டுமே தூசி இல்லாமல் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒட்டுமொத்த ஆய்வு முடிவுகள், மாநகராட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டுவதாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது. தூசியைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தில்லி தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தூய காற்றை உறுதி செய்வதற்காக ஆணையம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
Matribhumi Samachar Tamil

