இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கவும் மேம்படுத்தவும், கலாச்சார அமைச்சகம் கலாச்சார வரைபடத்திற்கான தேசிய இயக்கத்தை நிறுவியுள்ளது. இந்திரா காந்தி தேசிய கலை மையத்தால் செயல்படுத்தப்படும் இந்த இயக்கம், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தையும் கிராமப்புற பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவதற்கான அதன் திறனையும் ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, கலாச்சார வரைபடத்திற்கான தேசிய இயக்கம் ஜூன் 2023 (httpsmgmd.gov.in) -ல் மேரா காவ்ன் மேரி தரோஹர் (எனது கிராமம் எனது பாரம்பரியம்) போர்ட்டலை அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சி இந்தியாவின் 6.5 லட்சம் கிராமங்களின் கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, 4.5 லட்சம் கிராமங்கள் அந்தந்த கலாச்சார பிரிவுகளுடன் போர்ட்டலில் நேரலையில் உள்ளன.
வாய்வழி மரபுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், வரலாற்று முக்கியத்துவம், கலை வடிவங்கள், பாரம்பரிய உணவு, முக்கிய கலைஞர்கள், கண்காட்சிகள் மற்றும் திருவிழாக்கள், பாரம்பரிய உடைகள், ஆபரணங்கள் மற்றும் உள்ளூர் அடையாளங்கள் உள்ளிட்ட பரந்த அளவிலான கலாச்சார கூறுகளை இந்தப் போர்டல் கொண்டுள்ளது
கலாச்சார வரைபடத்திற்கான தேசிய இயக்கம் என்பது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கும் கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். கலாச்சார சொத்துக்களை ஆவணப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதன் மூலம், கலாச்சார அடையாளத்தை வலுப்படுத்துவதையும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதையும் இந்தப் பணி நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநில வாரியான விவரங்கள் போர்ட்டலில் கிடைக்கின்றன; பல்வேறு கலாச்சார களங்கள், கலைஞர்கள் மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களுக்கான தரவுகளை அடையாளம் காணுதல் மற்றும் சேகரிப்பதற்கான ஒரு தொகுப்பு வடிவமைப்பை போர்ட்டல் கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.