பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய ஜம்மு ரயில்வே கோட்டத்தைக் காணொலி மூலம் தொடங்கி வைத்ததன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் இந்தியாவின் ரெயில்வேயில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்த முக்கிய நிகழ்வில், அறிவியல், தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தப் பகுதியில் நடைபெற்று வரும் ரயில் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார். ஜம்மு-காஷ்மீரை தேசிய நீரோட்டத்துடன் இணைப்பதிலும், பொருளாதார, சமூக முன்னேற்றத்தை ஊக்குவிப்பதிலும் அவற்றின் பங்கை அவர் சுட்டிக் காட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்த ரயில்வே கோட்டம் நிறுவியதன் மூலம் ஜம்மு-காஷ்மீரை நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதையுடன் ஒருங்கிணைப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாடு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த காலங்களில் இந்தப் பகுதியில் நிலவிய போக்குவரத்து சவால்கள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்த காலதாமதங்கள் ஆகியவற்றையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் அண்மை ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரயில்வே தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வலிமையின் அடையாளத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் பிரான்சில் உள்ள ஈபிள் கோபுரத்தை விடவும் உயர்ந்து நிற்கும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.