தேசிய மனித உரிமைகள் ஆணையம், புதுதில்லியில் உள்ள அதன் வளாகத்தில் ‘தனிநபர்களின் கண்ணியமும் சுதந்திரமும் – கையால் கழிவுகளை அகற்றுபவர்களின் உரிமைகள்’ என்ற தலைப்பில் வெளிப்படையான விவாத நிகழ்ச்சியை நடத்தியது. ஆணையத்தின் உறுப்பினர்கள் திருமதி விஜயபாரதி சயானி மற்றும் நீதியரசர் (டாக்டர்) பித்யுத் ரஞ்சன் சாரங்கி, பொதுச் செயலாளர் திரு பாரத் லால் மற்றும் பிற உயர் அதிகாரிகள் முன்னிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி திரு வி ராமசுப்பிரமணியன் தலைமையில் இந்த விவாதம் நடைபெற்றது. பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், ஐ.நா முகமைகள், தனியார் அமைப்புகள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் ஆகியோர் இதில் பங்கேற்றனர். கையால் கழிவுகளை அகற்றுபவர்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அவர்களுக்கு உறுதி செய்வது குறித்து தங்களது கருத்துகளை பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
மனிதக் கைகளால் மலக் கழிவுகளை அள்ளும்பணியை முற்றிலும் நீக்குவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. அது நிர்வாகத்தால் செயல்படுத்தப்படுவதோடு நீதித் துறையால் கண்காணிக்கப்படுகிறது என்று தேசிய மனித உரிமை ஆணையத்தின் இந்தியத் தலைவர் கூறினார். இருப்பினும், கழிவுநீர் மற்றும் அபாயகரமான கழிவுகளைக் கையால் சுத்தம் செய்வதை ஒழிக்க சட்ட விதிகள் இருந்தபோதிலும் துப்புரவுத் தொழிலாளர்களின் மரணங்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
தீர்வுக்கான நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்கு மூல காரணங்களை ஆய்வு செய்து புரிந்துகொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார். கழிவுநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய தொழில்நுட்பம் / ரோபோக்களைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு மாநிலத்தில் முன்னோட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.