மஹாகும்பமேளா 2025-க்கு தயாராகும் வகையில், பிரயாக்ராஜ் முழுவதும் பல்வேறு இடங்களில் அடர்ந்த காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. நகரத்திற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில், தூய காற்று மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலையை உறுதி செய்வதற்காக பிரயாக்ராஜ் மாநகராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜப்பானிய மியாவாக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி, பல பிராண வாயு ஆக்ஸிஜன் வங்கிகளை நிறுவியது. அவை இப்போது பசுமையான காடுகளாக மாறியுள்ளன. இந்த முயற்சிகள் பசுமையை மேம்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களித்துள்ளன. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிரயாக்ராஜ் மாநகராட்சி ஆணையர் திரு சந்திர மோகன் கார்க் கூறுகையில், மியாவாக்கி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நகரின் பல பகுதிகளில் அடர்ந்த காடுகளை உருவாக்கி வருகிறோம். மாநகராட்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் 55,800 சதுர மீட்டர் பரப்பளவில் நகரில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட்டுள்ளது. நைனி தொழில்துறை பகுதியில் 63 வகையான சுமார் 1.2 லட்சம் மரங்களைக் கொண்ட மிகப்பெரிய தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நகரின் மிகப்பெரிய குப்பை கொட்டும் முற்றத்தை சுத்தம் செய்த பின்னர் பஸ்வரில் 27 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 27,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் தொழிற்சாலை கழிவுகளை அகற்ற உதவுவதுடன் மட்டுமல்லாமல், தூசு, அழுக்கு மற்றும் துர்நாற்றத்தையும் குறைக்கிறது. கூடுதலாக, இது நகரத்தின் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. மியாவாக்கி காடுகள் காற்று மற்றும் நீர் மாசுபாட்டைக் குறைத்தல், மண் அரிப்பைத் தடுத்தல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை அதிகரித்தல் போன்ற பல நன்மைகளைக் கொண்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் பழம் தரும் மரங்கள் முதல் மருத்துவ மற்றும் அலங்கார தாவரங்கள் வரை பல்வேறு வகையான இனங்கள் உள்ளன. இந்த திட்டத்தின் கீழ் நடப்பட்ட முக்கிய இனங்களில் மா, மஹுவா, வேம்பு, அரச மரம், புளி, அர்ஜுனா, தேக்கு, துளசி, நெல்லிக்காய், பெர் ஆகிய மரங்கள் அடங்கும். கூடுதலாக, செம்பருத்தி, கடம்பா, குல்மோஹர், ஜங்கிள் ஜிலேபி, போகன்வில்லா மற்றும் பிராமி போன்ற அலங்கார மற்றும் மருத்துவ தாவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. வேறு பல ரகங்களைச் சேர்ந்த மரங்களும் நடப்பட்டுள்ளன.
மியாவாக்கி நுட்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
1970-களில் புகழ்பெற்ற ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி உருவாக்கிய மியாவாக்கி நுட்பம், வரையறுக்கப்பட்ட இடங்களில் அடர்ந்த காடுகளை உருவாக்குவதற்கான ஒரு புரட்சிகரமான முறையாகும். இது பெரும்பாலும் ‘பானை தோட்ட முறை’ என்று குறிப்பிடப்படுகிறது. இது மரங்கள் மற்றும் புதர்களை அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்த ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாக நடவு செய்வதை உள்ளடக்குகிறது. இந்த நுட்பத்தால் தாவரங்கள் 10 மடங்கு வேகமாக வளர்கின்றன, இது நகர்ப்புறங்களுக்கு நடைமுறை தீர்வாக அமைகிறது.
நகர்ப்புற அமைப்புகளில், இந்த நுட்பம் மாசுபட்ட, தரிசு நிலங்களை பசுமை சுற்றுச்சூழல் அமைப்புகளாக மாற்றியுள்ளது. இது தொழிற்சாலை கழிவுகளை வெற்றிகரமாக நிர்வகித்துள்ளது. தூசி மற்றும் துர்நாற்றத்தை குறைத்துள்ளது. காற்று மற்றும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தியுள்ளது. கூடுதலாக, இது மண் அரிப்பைத் தடுக்கிறது. மேலும் சுற்றுச்சூழல் சமநிலையை ஊக்குவிக்கிறது, இது சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கான சிறந்த கருவியாக அமைகிறது.