தமிழ்நாடு அஞ்சல் வட்டம், தென்னிந்திய அஞ்சல் தலை சேகரிப்போர் சங்கத்துடன் இணைந்து சென்னையில் 14-வது மாநில அளவிலான அஞ்சல் தலை சேகரிப்பு கண்காட்சி “TANAPEX 2025” ஐ ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 வரை, செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தின் சமுதாயக் கூடத்தில் நடத்துகிறது.
“அணிவகுக்கும் அஞ்சல் தலைகள், அணைக்கும் நினைவலைகள்” என்பது இந்தக் கண்காட்சியின் கருப்பொருளாகும். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு என்.முருகானந்தம், 29-ம் தேதி, தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் அதிகாரி திருமதி மாரியம்மா தாமஸ் முன்னிலையில், “டான்பெக்ஸ் 2025” அஞ்சல் தலை கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இக்கண்காட்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர் திரு.சிவகுமார் வரைந்த “தமிழ்நாடு 1960கள்” என்ற அஞ்சலட்டை படமும் வெளியிடப்படும்.

30-ம் தேதி, தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு பி செந்தில்குமார், முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் திரு.சீனிவாஸ் ஆர்.ரெட்டி, ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். 31-ம் தேதி நடைபெறவுள்ள கருப்பொருள் நிகழ்வுகளுக்கு தினமணி தமிழ் நாளிதழ் ஆசிரியர் திரு.கிருஷ்ணன் வைத்தியநாதன் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்கிறார். 01-ம் தேதி நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சென்னை தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் திவ்யா சத்யன் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.
அஞ்சல் தலை சேகரிப்பை ஊக்குவிக்க இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் சுமார் 510 சட்டகங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி மாணவர்களுக்கு மெகா விநாடி-வினா, கடிதம் எழுதுதல், ரங்கோலி மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் புயல் குறித்த கருத்தரங்குகள் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த தபால் தலை கண்காட்சியின் நிறைவு விழா 01.02.2025 அன்று மாலை 4.00 மணிக்கு நடைபெறும். வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்படும்.
Matribhumi Samachar Tamil

