அதிபர் மேக்ரோனின் அழைப்பையடுத்து, பிப்ரவரி 10 முதல் 12 வரை பிரான்சில் பயணம் மேற்கொள்கிறேன். பாரிஸில், உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளின் கூட்டமான செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாட்டில் இணைத்தலைமை தாங்க நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். அங்கு புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் பரந்த அளவிலான பொது நன்மையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான கூட்டு அணுகுமுறை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இருக்கிறோம்.
எனது பயணம் எனது நண்பர் அதிபர் மேக்ரோனுடன் இணைந்து இந்தியா-பிரான்ஸ் இடையே உத்திசார்ந்த கூட்டாண்மைக்கான 2047 ஹாரிசன் செயல் நடவடிக்கையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை அளிக்கும். வரலாற்று சிறப்புமிக்க பிரெஞ்சு நகரமான மார்சேயில் முதலாவது இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைப்பதற்காக நாங்கள் அங்கு பயணிக்கிறோம். உலகளாவிய நன்மைக்காக ஆற்றலைப் பயன்படுத்துவதற்காகப் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள கூட்டமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக உள்ள சர்வதேச வெப்ப அணுசக்தி பரிசோதனை உலை திட்டத்தையும் பார்வையிட உள்ளோம். முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர்களின் போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு மசார்குஸ் போர் நினைவிடத்தில் நான் மரியாதை செலுத்துவேன்.
பிரான்சிலிருந்து, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்காவிற்கு இரண்டு நாள் பயணமாகச் செல்கிறேன். எனது நண்பர் அதிபர் டிரம்ப்பைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜனவரியில் அவர் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்று பதவியேற்றதைத் தொடர்ந்து இது எங்கள் முதல் சந்திப்பாக இருந்தாலும், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒரு விரிவான உலகளாவிய திட்டமிட்ட கூட்டாண்மையை உருவாக்குவதில் அவரது முதலாவது பதவிக்காலத்தில் இருந்து இணைந்து பணியாற்றியதை மிகவும் அன்புடன் நினைவு கூர்கிறேன்.
அவரது முதலாவது பதவிக்காலத்தில் எங்களது ஒத்துழைப்பின் வெற்றியைக் கட்டமைக்க இந்தப் பயணம் வாய்ப்பாக அமையும். தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய விநியோகச் சங்கிலி மீள்தன்மை உள்ளிட்ட துறைகளில் நமது கூட்டாண்மையை மேலும் அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் ஒரு திட்டமிடலை உருவாக்கவும் ஒரு வாய்ப்பாக இருக்கும். நமது இருநாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். மேலும் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை வடிவமைப்போம்.
Matribhumi Samachar Tamil

