பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 9 அன்று ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். ஜெய்ப்பூர் செல்லும் அவர், காலை 10:30 மணியளவில், ஜெய்ப்பூர் கண்காட்சி – மாநாட்டு மையத்தில் (ஜேஇசிசி) ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024-ஐ தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, பானிபட் செல்லும் பிரதமர், பிற்பகல் 2 மணியளவில் எல்ஐசி-யின் பீமா சகி யோஜனா திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
ராஜஸ்தானில் பிரதமர்
ரைசிங் ராஜஸ்தான் உலக முதலீட்டாளர் உச்சி மாநாடு 2024, ராஜஸ்தான் உலக வர்த்தகக் கண்காட்சி ஆகியவற்றைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஜெய்ப்பூர் கண்காட்சி – மாநாட்டு மையத்தில் நடைபெறுப் இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.
டிசம்பர் 9 முதல் 11 வரை நடைபெறவுள்ள முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் கருப்பொருள் ‘நிறைவு, பொறுப்பு, தயார் நிலை’ என்பதாகும். நீர் பாதுகாப்பு, நீடித்த சுரங்க நடைமுறைகள், நீடித்த நிதி மேலாண்மை, அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுலா, வேளாண் வணிக கண்டுபிடிப்புகள், பெண்கள் தலைமையிலான புத்தொழில்கள் உள்ளிட்ட கருப்பொருள்கள் குறித்து 12 துறை சார்ந்த அமர்வுகள் இந்த உச்சிமாநாட்டில் இடம்பெறும். ‘நகரங்களுக்கான நீர் மேலாண்மை’, ‘தொழில்களின் பன்முகத்தன்மை- உற்பத்தியும் அதற்கு அப்பாலும்’ ‘வர்த்தகமும் சுற்றுலாவும்’ போன்ற கருப்பொருள்களில் எட்டு அமர்வுகளும் இந்த உச்சிமாநாட்டின் போது நடைபெறும்.
வெளிநாடு வாழ் ராஜஸ்தானி மாநாடு, குறு,சிறு, நடுத்தர தொழில் மாநாடு ஆகியவையும் இந்த மூன்று நாட்களில் நடைபெறும். ராஜஸ்தான் உலக வர்த்தக கண்காட்சியில் ராஜஸ்தான் அரங்கம், தேசிய அரங்கம், புத்தொழில் அரங்கம் போன்ற கருப்பொருள் அரங்குகள் இடம்பெறும். இந்த மாநாட்டில் 16 கூட்டு செயல்பாட்டு நாடுகள் உட்பட 32 நாடுகள், 20 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
ஹரியானாவில் பிரதமர்
பெண்களுக்கு அதிகாரமளித்தல், நிதி உள்ளடக்கம் ஆகியவை குறித்த தமது உறுதிப்பாட்டிற்கு ஏற்ப, பானிபட்டில் ‘பீமா சகி யோஜனா’ திட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) இந்த முயற்சி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 70 வயதுடைய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதியியல் அறிவு, காப்புறுதி விழிப்புணர்வு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறப்பு பயிற்சியும் உதவித்தொகையும் வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு, அவர்கள் எல்ஐசி முகவர்களாக பணியாற்ற முடியும். மேலும் பட்டதாரி பீமா சகி-கள் எல்ஐசி-யில் மேம்பாட்டு அதிகாரி பணிகளுக்குப் பரிசீலிக்க தகுதி பெறுவார்கள். வருங்கால பீமா சகிகளுக்கு நியமன சான்றிதழ்களையும் பிரதமர் வழங்குவார்.
இந்த நிகழ்ச்சியின்போது, கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். 495 ஏக்கர் பரப்பளவில் பிரதான வளாகமும் ஆறு மண்டல ஆராய்ச்சி நிலையங்களிம் ரூ .700 கோடிக்கும் அதிகமான செலவில் நிறுவப்படும். இப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு ஒரு தோட்டக்கலைக் கல்லூரியும், 10 தோட்டக்கலைத் துறைகளை உள்ளடக்கிய ஐந்து பள்ளிகளும் இருக்கும். இது பயிர் மாற்றுத்தன்மை, தோட்டக்கலை தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சியை நோக்கி செயல்படும்.