நிலக்கரித் துறையின் நீடித்த வளர்ச்சிக்கு சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், வளங்களைப் பாதுகாத்தல், சமூகத்தின் மீதான அக்கறை, காடுகள் மற்றும் பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது:
ஒரு புதிய சுரங்கம் திறப்பதற்கு அல்லது உற்பத்தித் திறன் மற்றும்/அல்லது நிலப்பரப்பை மேம்படுத்துவதற்கு, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிகள், 1986 மற்றும் இஐஏ அறிவிக்கை, 2006 மற்றும் அடுத்தடுத்த திருத்தங்களின் கீழ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து முன் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுகிறது. சுற்றுச்சூழல் குழுவின் நிபந்தனைகளுக்கு இணங்க சுரங்கங்கள் இயக்கப்படுவதால் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.
சுரங்கத் திட்டம் மற்றும் சுரங்க மூடல் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் மீதான அக்கறை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. நிலக்கரி உற்பத்தி இலக்கை நிலையான முறையில் அடைவதும், சுரங்கம் இறுதியாக மூடப்பட்ட பிறகு எதிர்கால சந்ததியினருக்கு நில பயன்பாட்டை உறுதி செய்வதும் இலக்காகும். இந்த மூடல் செயல்முறை சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சட்டரீதியான விதிமுறைகளுக்கு இணங்குதல் ஆகிய இரண்டையும் உறுதி செய்கிறது. சுரங்கம் மூடல் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, உயிரியல் மீட்பு, பசுமை வளையம், காற்று மற்றும் நீர் மேம்பாடு மற்றும் பிற சுற்றுச்சூழல் தர மேலாண்மை போன்றவை சுரங்கத்தின் செயல்பாட்டு காலத்திலும் சுரங்கம் மூடப்பட்ட பிந்தைய காலத்திலும் மேற்கொள்ளப்படுகின்றன.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.