பஞ்சாபில், நெல் மாநில அரசு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதாய விலை கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு, மத்திய அரசு நிர்ணயித்துள்ள சீரான தரவுகளின்படி குறைந்தபட்ச ஆதார விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இருப்பினும், ஏதேனும் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட உணவு தானியங்களுக்கு தரநிலையில் தளர்வு அளிக்கப்பட்டு சுமூகமாக கொள்முதல் செய்யப்படுகின்றன.
2024-25 காரீப் பருவ காலத்தில், பஞ்சாபில் உள்ள விவசாயிகளிடமிருந்து சுமார் 172 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், 169 லட்சம் மெட்ரிக் டன் ஏற்கனவே பஞ்சாப் மண்டிகளில் இருந்து எடுத்து செல்லப்பட்டு, நெல் இருப்பை மேலும் அரைப்பதற்காக ஆலைகளில் சேமிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தரவுகளின்படி ஆலை உரிமையாளர்களிடமிருந்து அரிசியை இந்திய உணவுக் கழகம் ஏற்கத் தொடங்கியுள்ளது. மேலும் 94,000 மெட்ரிக் டன் அரிசியை இந்திய உணவுக் கழகம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.