பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குவைத் நாட்டின் பிரதமர் ஷேக் அகமது அல்-அப்துல்லா அல்-அஹ்மத் அல்-சபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தலைவர்களும் அரசியல், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட துறைகளில் உத்திசார் கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான செயல் திட்டம் குறித்து விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் வலியுறுத்தினர். எரிசக்தி, பாதுகாப்பு, மருத்துவ சாதனங்கள், மருந்து, உணவுப் பூங்காக்கள் உள்ளிட்ட துறைகளில் புதிய வாய்ப்புகளை ஆராய குவைத் முதலீட்டு ஆணையம் மற்றும் பிற பங்குதாரர்கள் அடங்கிய குழுவை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தார். பாரம்பரிய மருத்துவம் மற்றும் விவசாய ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர். கூட்டுறவுக்கான கூட்டு ஆணையத்தில் (ஜேசிசி) சமீபத்தில் கையெழுத்திட்டதை அவர்கள் வரவேற்றனர், இதன் கீழ் சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஹைட்ரோகார்பன்கள், தொடர்பான ஏற்கனவே உள்ள கூட்டுப் பணிக்குழுக்களுடன், கூடுதலாக வர்த்தகம், முதலீடு, கல்வி, தொழில்நுட்பம், விவசாயம், பாதுகாப்பு, கலாச்சாரம் ஆகிய துறைகளில் புதிய கூட்டுப் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு தலைவர்கள் முன்னிலையில், இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாற்றம் செய்யப்பட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், கலாச்சார பரிமாற்ற திட்டம், விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான நிர்வாகத் திட்டம் மற்றும் குவைத் சர்வதேச சோலார் கூட்டணியில் இணைவதற்கான கட்டமைப்பு ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும்.
இந்தியா வருமாறு குவைத் பிரதமருக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.