உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாட்டிற்கு முன்னோடியான இந்தியாவில் படைப்போம் சவால் – சீசன் 1-க்கு பெரும் வரவேற்பு இருப்பதை அறிவிப்பதில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மகிழ்ச்சி அடைகிறது.
இந்தியாவில் படைப்போம் சவால் (சி.ஐ.சி) என்பது இந்தியப் படைப்பாளர்களின் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளடக்க படைப்பாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களின் திறன்களைப் பணமாக்கவும், இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் அதிகாரம் அளிக்கிறது. இது உலக அளவில் இந்தியாவின் மென்மையான சக்தியை மேம்படுத்துகிறது, இந்தியாவின் வளர்ந்து வரும் படைப்பாற்றல் திறமைகளுக்கான ஏவுதளமாக செயல்படுகிறது. அவர்களை உலகளாவிய அங்கீகாரத்தை நோக்கி உந்துகிறது.
அனைத்து சவால்களுக்கான பதிவுகளும் https://wavesindia.org/challenges-2025
என்ற வேவ்ஸ் இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளன:
2024, ஆகஸ்ட் 22 அன்று தொடங்கப்பட்ட இந்தியாவில் படைப்போம் சவால் என்பது 27 சவால்களுடன் நாடு தழுவிய மற்றும் உலக அளவில் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்த சவால்கள் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் பல்வேறு பிரிவுகளில், குறிப்பாக ஒளிபரப்பு, விளம்பரம், இசை, டிஜிட்டல் ஊடகம், சமூக ஊடகம், திரைப்படங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பலவற்றில் பரவியுள்ளன.
நாடு தழுவிய பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, தொழில்துறை சங்கங்களுடன் இணைந்து பல வெற்றிகரமான மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 2024, செப்டம்பர் 20 அன்று ஐதராபாதில், இந்தியா கேம் டெவலப்பர் மாநாட்டின் ஆதரவுடன், 50 தொழில்துறை வல்லுநர்கள் உட்பட 250 க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். செப்டம்பர் 28 அன்று நடைபெற்ற சென்னை வேகாஸ் விழாவில் 5,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். அக்டோபர் 5 அன்று பெங்களூரு மக்கள் தொடர்பு நிகழ்ச்சியை இந்திய மீடியா மற்றும் பொழுதுபோக்கு சங்கங்கள், சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஆகியவை இணைந்து நடத்தின. இது 40-50 தொழில்துறை தலைவர்கள் மற்றும் சங்கங்களிடையே மதிப்புமிக்க தொடர்புகளை எளிதாக்கியது.
இந்தியாவில் படைப்போம் சவால் – சீசன்1 இன்றுவரை, 10,000 க்கும் அதிகமான பதிவுகளைப் பெற்றுள்ளன. இந்த எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. அதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் இந்தியா முழுவதும் பல மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்களை ஈடுபடுத்த உயர் கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் மாணவர்கள் மற்றும் வளர்ந்து வரும் படைப்பாளர்களை ஊக்குவிக்க முயல்கின்றன.
வேவ்ஸ், இந்தியாவில் படைப்போம் சவால் ஆகியவற்றின் தாக்கத்தை மேலும் விரிவுபடுத்த அமைச்சகம் விரிவான பரப்புரை இயக்கம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் சமூக ஊடக ஒத்துழைப்புகள், இந்தியா முழுவதும் சுமார் 28 இடங்களில் உள்நாட்டு மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் மற்றும் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானில் சர்வதேச மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் ஆகியவையும் அடங்கும். இந்த நிகழ்வுகள் ஒத்துழைப்பை வளர்க்கும், உற்சாகத்தை உருவாக்கும் மற்றும் உலகளாவிய பங்கேற்பை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.