36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். ஆயுதப்படையினர், அதிகாரிகள் ஆகியோரின் துணிச்சல் மற்றும் தியாகத்தை கௌரவிக்கும் வகையில் மாணவர்கள் கவிதைகள், ஓவியங்கள், கட்டுரைகள், வீடியோக்கள் போன்றவற்றை அனுப்பியுள்ளனர்
வீரதீர செயலுக்கான விருது பெற்றவர்களின் வீரம், தன்னலமற்ற தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் எழுச்சியூட்டும் கதைகளையும், இந்த துணிச்சல்மிக்கவர்களின் வாழ்க்கைக் கதைகளையும் மாணவர்களிடையே கூறி, அவர்களிடையே தேசபக்தி உணர்வை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த வீரக்கதை திட்டம் 2021-ல் ஏற்படுத்தப்பட்டது.
வீரக்கதை திட்டங்கள் முறையே 2021, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளன. வீரக்கதை திட்டம் 4.0-ன் கீழ், பின்வரும் நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன:
பள்ளி அளவில் செயல்பாடுகள்: பள்ளிகள் பல்வேறு திட்டங்கள்/செயல்பாடுகளை (16.09.2024 முதல் 31.10.2024 வரை) நடத்தியுள்ளன, மேலும் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் மொத்தம் 4 சிறந்த உள்ளீடுகளை மைகவ் இணையதளத்தில் பதிவேற்றியுள்ளன.
அதே நேரத்தில், பள்ளி மாணவர்களிடையே துணிச்சலான வீரர்கள் மற்றும் அறியப்படாத கதைகள் பற்றி எடுத்துரைப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகம், அதன் கள அமைப்புகள் அல்லது ராணுவம் / கடற்படை / விமானப்படை மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மெய்நிகர் சந்திப்புகள் / நேருக்கு நேர் விழிப்புணர்வு திட்டங்கள் / அமர்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதும் மாணவர்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. வீரக்கதை திட்டத்தில் (பதிப்பு-1) 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது; இரண்டாம் பதிப்பில் 19.5 லட்சம் மாணவர்களும், மூன்றாம் பதிப்பில் 1.36 கோடி மாணவர்களும் பங்கேற்றனர்.
வீரக்கதை திட்டம் 3.0-ல், தேசிய அளவில் 100 வெற்றியாளர்கள் (சூப்பர் 100) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஆண்டும், வீரக்கதை 4.0 திட்டத்தின் கீழ், 100 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கான பாராட்டு புதுதில்லியில் உள்ள கல்வி அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தால் கூட்டாக நடத்தப்படும். வெற்றி பெறும் ஒவ்வொருவருக்கும் ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவில் தலா 4 வெற்றியாளர்களும், மாநில / யூனியன் பிரதேச அளவில் தலா 8 வெற்றியாளர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அத்தகைய வெற்றியாளர்கள் அனைவரும் அந்தந்த மாவட்டம் மற்றும் மாநிலம் / யூனியன் பிரதேசங்களால் பாராட்டப்படுவார்கள்.