நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் அசோக் ராஜ் சிக்டெல், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை 2024 டிசம்பர் 12 அன்று புதுதில்லியில் சந்தித்து, இருதரப்பு உறவுகள் தொடர்பான பல விவகாரங்கள் குறித்து விவாதித்தார். நேபாள இராணுவத்தின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள், வழக்கமான பயிற்சிகள், பயிலரங்குகள், கருத்தரங்குகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கிடங்குகள் வழங்குதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்களை பாதுகாப்பு அமைச்சர் எடுத்துரைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மிகவும் வலுவான இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை குறித்து திரு ராஜ்நாத் சிங் ஆழ்ந்த திருப்தி தெரிவித்தார். நெருங்கிய அண்டை நாடுகள் என்ற முறையில், இந்தியாவும், நேபாளமும் பரஸ்பர அக்கறை கொண்ட பல விவகாரங்களில் ஒரே மாதிரியான கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கைக்கு ஏற்ப, அண்டை நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது என்று அவர் மீண்டும் குறிப்பிட்டார்.
இந்திய ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவி பெற்றமைக்காக நேபாள ராணுவ தலைமை தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.