இந்தியா-தான்சானியா கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 3வது கூட்டம் 2024, நவம்பர் 26 அன்று கோவாவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, வளர்ந்து வரும் பயிற்சி கூட்டாண்மை, ராணுவத்துடன் ராணுவம் ஒத்துழைப்பு, கடல் மற்றும் பாதுகாப்பு தொழில் ஒத்துழைப்பு உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது பற்றி இரு தரப்பினரும் விவாதித்தனர். முந்தைய கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டங்களின் போது எடுக்கப்பட்ட முடிவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் அவர்கள் ஆய்வு செய்தனர். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதற்கான புதிய பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.
இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத் தலைமையிலான இந்தியக் குழுவில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர். தான்சானியாவிற்கான இந்திய ஹைகமிஷனர் திரு பிஸ்வாதீப் டேயும் கூட்டத்தில் கலந்து கொண்டார். தான்சானிய தூதுக்குழுவிற்கு தரைப்படை தளபதி மேஜர் ஜெனரல் ஃபாதில் ஓமரி நோண்டோ தலைமை தாங்கினார்.
சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, தான்சானிய தூதுக்குழு கோவா கப்பல் கட்டும் நிறுவனத்திற்குச் சென்று துறைமுக மேம்பாடு மற்றும் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் திறன்களைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெறவுள்ளது. கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா, தேசிய நீரியல் கல்விக்கழகம் ஆகியவற்றையும் இந்தக் குழு பார்வையிட உள்ளது.
வலுவான திறன் மேம்பாடு மற்றும் கூட்டாண்மையை வளர்ப்பதற்கான வழிகள் மூலம் தான்சானியாவுடன் நெருக்கமான, அன்பான மற்றும் நட்பான உறவுகளை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. இரு நாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வழிநடத்த ஐந்தாண்டு கால திட்டத்தைக் கொண்டுள்ளன.